தருமபுர ஆதீனத்துக்கு சேகர்பாபு திடீர் பயணம்! பின்னணி என்ன? ஆதீனகர்த்தரை சமாதானப்படுத்த முயற்சியா?

0
345

தருமபுர ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்வின்போது ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு தி.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு அந்நிகழ்வுக்கு தடைவிதித்தது.

ஆனால் இந்துமத ஆர்வலர்களும், பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில ஆதீன கர்த்தர்களை அழைத்துப் பேசிய தமிழக அரசு, பட்டினப் பிரவேசம் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெகு விமரிசையாக பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்தது.

பட்டினப் பிரவேசம் முழுக்க முழுக்க ஆன்மிக சம்பந்தமான நிகழ்வு, இதில் அரசியல் கலக்கக்கூடாது என ஆதீன கர்த்தர் கூறியிருந்தார். பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்ததும் முதலில் அவர் நன்றி தெரிவித்தது தமிழக அரசுக்கு தான்.

இந்நிலையில், தருமபுர ஆதீன மடத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்றிருந்தார். ஆதீனத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஞான சம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைத்தார். அத்துடன் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், ஆதீனகர்த்தர் உடன் இணைந்து அவர் தொடங்கி வைத்தார். அங்குள்ள பாடசாலை மாணவர்களையும் சந்தித்து அளவளாவினார்.

முன்னதாக, இன்று அதிகாலையிலேயே தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற சேகர்பாபு, அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதிகளில் வழிபட்டார். அத்துடன் அறநிலையத்துறை சார்பிலான சில ஆய்வுப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். அறநிலையத் துறை அமைச்சரின் இந்த வருகையால் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்பதை தருமபுரம் ஆதீனம் தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry