சென்னையில் வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்ச உணர்வுடன் மனக்குமுறலோடு வாழ்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர். 1998 குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறுபான்மை மக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பதவிதான் திமுகவின் பிரதான குறிக்கோள். மக்கள் எக்கேடுகெட்டுப் போனாலும் அவர்களுக்கு கவலையில்லை. சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள்.
தேர்தல் நேரங்களில் மட்டுமே நீட் தேர்வை திமுக கையிலெடுக்கும். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று பொய் வாக்குறுதி அளித்து திமுக ஓட்டு வாங்கியது. மத்தியில் காங்கிரஸ் – திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் விவகாரத்தில் ஆசை வார்த்தை, கயமை வார்த்தை, மோசடி வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்றார்கள். இன்றுவரை நீட் தேர்வை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்?
Also Read : பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு! அதிமுக மீது பாய்ந்து பிராண்டுவதாக ஈபிஎஸ் சாடல்!
ஒருவர் முட்டையை கையிலெடுத்துள்ளார். கூமுட்டைகள்தான் முட்டை எடுத்து காண்பிப்பார்கள். தேர்தலில் திமுகவுக்கு முட்டைதான். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாங்குகளை வாங்கிவிட்டு, இப்போது அனைவரிடம் கையெழுத்து கேட்கின்றனர். ஸ்டாலினும், உதவாநிதியும் மக்களை திசைதிருப்புகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டது. தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து யூ டியூபர் போல, தான் பேசும் கருத்துக்கு லைக் பண்ணுங்க, கமண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, பெல் ஐகான் கிளிக் பண்ணுங்க என்று ஸ்டாலின் பேசி வருகிறார். எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றுவரை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உண்டான மரியாதையை அதிமுக வழங்கி வருகிறது. ஆளுநரின் கருத்து திமுகவுக்குத்தான் பொருந்தும்” இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட இராயபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு மற்றும் இளைஞர் – இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான டி. ஜெயக்குமார், கே.டி. பச்சைமால் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவரணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே. காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry