புதுச்சேரியில், முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இடையேயான ஈகோவால் கொரோனா வேகமாகப் பரவுவதுடன், உயிரிழப்பும் அதிகமாகிறது.
கொரோனா தொற்று பரவலில் நாட்டிலேயே புதுச்சேரிதான் முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி மேலும் 511 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 12,434 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 190 ஆகவும் இருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிமான மக்கள் தொகை கொண்ட சென்னையோடு ஒப்பிடும்போது, 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் தொற்று விகிதம் மின்னல் வேகத்தில் இருக்கிறது.
பரிசோதனை முடிவுகளை காலதாமதமாகக் கொடுப்பதும் இந்த அவலத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் உயிரிழந்த என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலனின் வாக்குமூலமே இந்த உண்மையை உணர்வதற்கு போதுமானது.
பரிசோதனை முடிவுகளை கொடுக்க குறைந்தது 6 நாட்கள் வரை ஆகிறது. சந்தேகத்தின்பேரில் பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுக்கும் நபர், அதன்பிறகு, வழக்கம்போல தனது பணிகளை செய்கிறார், நண்பர்களை ,உறவினர்களை சந்திக்கிறார். 6-வது நாள், கொரோனா பாசிடிவ் வந்துள்ளது, மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள். இப்படியிருந்தால் கொரோனா பரவாமல் என்ன செய்யும்?
இதற்கெல்லாம் உச்சமாக, பரிசோதனைக்கு மாதிரியைக் கொடுத்து, உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நபரை, கொரோனா பாசிடிவ் வந்துள்ளது, சிகிச்சை வாருங்கள் என தொலேபேசி மூலம் அழைத்த கொடூரமும் இங்கு அரங்கேறியுள்ளது. இதேபோன்று பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில், முதலமைச்சர், சுகாதார அமைச்சர் இடையேயான ஈகோ யுத்தம், மேலும் பல உயிர்களை பலிவாங்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பொதுவாகப் பார்த்தால், கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையில் புதுச்சேரி அரசு தோல்வியடைந்துள்ளது என கூறிவிட்டு கடந்துபோய்விடலாம். ஆனால், ஏன் தோல்வி அடைந்தது, அடைகிறது என்பதை பார்த்தாக வேண்டும். தொற்று அதிகரிக்கத் தொடங்கியுவுடனேயே சனி, ஞாயிறு ஆகிய இரண்டு கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டிருக்கிறார்.
ஈகோ காரணமாக, நாராயணசாமி இதனை ஏற்கவில்லை. பிறகு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் நெருக்கடி காரணமாக, நாராயணசாமி, செவ்வாய் கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்தார். விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் வெளியே வருவதைத் தடுக்கவே, மல்லாடி கிருஷ்ணாராவ் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என கோரினார். ஆனால், சம்பந்தமே இல்லாமல், செவ்வாய்கிழமை முழு ஊரடங்கு என நாராயணசாமி அறிவித்தார். இதுவரை 2 செவ்வாய்கிழமைகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது.
இதனால் பரவல் விகிதம் குறையவில்லை, மாறாக, அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. மல்லாடி கிருஷ்ணாராவைப் பொறுத்தவரை, சுகாதாரத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து, பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுப்பதாகவே தெரிகிறது. இதனால் ஆட்சிக்குத்தானே நல்லபெயர், மக்கள் பலியாவததைத் தடுக்கலாமே என்பதை உணராமல், ஈகோ காரணமாக மல்லாடியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே நாராயணசாமி கவனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் இதே ரீதியில் செயல்பட்டார் என்றால், செப்டம்பர் மாதத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டுவிடும். உயிரிழப்புகளும் மேலும் அதிகரித்துவிடும். ஈகோவை மறைப்பதற்காக மக்கள் மீது குறை கூறாமல், கொரோனா தடுப்பில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தினால், பரவலையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry