முகாம் மாறும் AKD ஆறுமுகம்! பலவீனமடையும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி!

0
289

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான AKD ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட AKD ஆறுமுகம், கட்சியில் மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தார். புதுச்சேரி காங்கிரஸுக்கு அவர்தான் அடுத்த தலைவர் என்ற ரீதியில் கட்சியினர் பேசி வந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், இந்திரா நகர் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் AKD ஆறுமுகம் களமிறக்கப்பட்டார். தீவிரமான களப்பணியின் காரணமாக, ரங்கசாமிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திய அவர், 3404 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போதும் இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

தற்போது, நாராயணசாமிக்கும், AKD ஆறுமுகத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், கட்சியில் இருந்து ஆறுமுகம் சுத்தமாக ஓரங்கட்டப்பாட்டுள்ளார். கட்சிக்காக பெருமளவு செலவு செய்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அவரது நீண்டநாள் வருத்தமாகவே இருந்து வருகிறது. எனவே, எதிரெதிர் துருவமாக இருந்தாலும் பரவாயில்லை, ரங்கசாமியோடு கைகோர்த்துவிடலாம் என அவர் நினைப்பதாக தகவல்கள் கிடைக்கிறது.

இதுபற்றி, வேல்ஸ் மீடியா சார்பாக, என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். கடந்த தேர்தலின்போது எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில், AKD ஆறுமுகம் கொடுத்த நெருக்கடியை ரங்கசாமி மறக்கவில்லை. எனவே ரங்கசாமி அவரை கட்சியில் சேர்த்துக்கொள்வாரா என்பது சந்தேகமே, வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறுகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தனக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும், நாராயணசாமி தம்மை அழைத்து சமாதானம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே, AKD ஆறுமுகம் கட்சி மாறப்போவதாக தகவல்களை பரப்பி வருகிறார் என கூறுகின்றனர்.

இப்படி இரண்டு வாய்ப்புகளுமே கேள்விக்குறியான நிலையில், AKD ஆறுமுகத்தின் அடுத்த நடவடிக்கை எப்படியானதாக இருக்கும் என்று, அவரது ஆதரவாளர்களிடமே கேட்டோம். கதிர்காமம் அல்லது இந்திரா நகர் தொகுதியில், ஏதாவது ஒரு அமைப்பு அல்லது கட்சியின் ஆதரவுடன் அவர் போட்டியிடுவது உறுதி என்கின்றனர்.

கதிர்காமம், இந்திரா நகர் இரண்டுமே என்.ஆர். காங்கிரஸ் கோட்டையாக கருதப்படுகிறது. இவர்களது கணக்குப்படி, ஏதாவது கூட்டணி சார்பில் AKD ஆறுமுகம் களமிறங்கினால், வெற்றி வாய்ப்பு இருப்பதை மறுக்கமுடியாது. ஏனென்றால், கடந்த தேர்தலின்போது, ஆற்றிய களப்பணி, தேர்தல் வியூகங்கள் ஆகியவை அவருக்கு பெருமளவு கைகொடுக்கும் என்று கருதலாம்.

Subscribe to our channels on :

YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry