காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

0
82
Morning or Evening Walk: Which is better for your health? | Getty Image

நடைப்பயிற்சி என்பது அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் பெரும்பாலானோர் இதை உணருவதில்லை. நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் எடை இழப்புக்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நடைப்பயிற்சி நேரடியாக நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. எனினும், நாம் எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

காலை நடைப்பயிற்சியின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்கிறது. நம் உடல்கள் நாளின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது காலையில் அதிக கலோரிகளை எரிக்க முனைகின்றன. இதன் பொருள் ஒரு குறுகிய 30 நிமிட நடைப்பயிற்சி கூட அதிக கொழுப்பை எரிக்கவும் எடை இழப்புக்கு உதவும். கூடுதலாக, காலை சூரிய ஒளியில் நடைபயிற்சி செய்யும்போது, வைட்டமின் டி கிடைக்கிறது. இதன் மூலம் எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை சிறப்பாக பராமரிக்க முடியும்.

காலை நடைப்பயிற்சியின் மற்றொரு நன்மை என்னவென்றால், மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. உடல் செயல்பாடுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவது எண்டோர்பின்கள் அதிகரிக்கும், அவை “ஃபீல்-குட்” ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன. காலை நடைப்பயிற்சியும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் இரவில் நன்றாக தூங்குகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. சென்னை போன்ற காற்று மாசுபட்ட நகரங்களில் காலை நேர நடைப்பயிற்சி நன்மை பயக்கும்.

Also Read : குத்தகைக் காலம் முடிந்தும் சுங்கச்சாவடிகளை மூட மறுக்கும் மத்திய, மாநில அரசுகள்! மூன்று மடங்கு லாபம் சம்பாதிக்கும் குத்தகைதாரர்கள்!

அதேநேரம், மாலை நேரத்தில் வாக்கிங் செல்வது எக்கச்சக்கமான பலன்களை அளிக்க கூடியதாக அமைகிறது. மாலை நேரத்தில் வாக்கிங் செல்வதால் கிடைக்கக்கூடிய மிக முக்கியமான பலன்களில் ஒன்று நம்முடைய இதய ஆரோக்கியம். வாக்கிங் என்பது ஏரோபிக் பயிற்சியின் சிறந்த வடிவமாக அமைவதால் அது இதய செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்கள் ஏற்ப்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. வழக்கமான முறையில் நீங்கள் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் பொழுது உங்களுடைய கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை சீராக பராமரிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் தவிர்க்கப்பட்டு, அதனால் ஏற்படும் நீரழிவு நோய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் போன்றவை தடுக்கப்படுகிறது.

அடுத்தபடியாக மாலை நேர நடை பயிற்சி செரிமானத்திற்கு சிறந்த முறையில் உதவுகிறது. மாலை நேர நடைபப்யிற்சி செரிமான அமைப்பை தூண்டி சிறந்த செரிமானத்தை ஊக்குவித்து, செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்து, வயிற்று உப்பசம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கிறது. இந்த மென்மையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்கிறது.

மாலை நேர நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு தரும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், அது மனநலனுக்கும் நன்மை தரும் விதமாக அமைகிறது. மன அழுத்தம் நிறைந்த ஒரு நாளில் நடைப்பயிற்சி செல்லும் பொழுது அது மனதை லேசாக்கி, என்டார்பின் என்ற ஹார்மோனை வெளியிட்டு, மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது. இது ஒரு விதமான தியான விளைவை அளித்து மனத்தெளிவை வழங்குகிறது.

Also Read : ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழல்! அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் இடையே கூட்டு! DGPக்கு அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம்! பெரும் சிக்கலில் தமிழக அரசு!

தூங்குவதில் சிக்கல்களை அனுபவிப்பவர்கள் தினமும் மாலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் கட்டாயமாக தூக்கத்தின் தரம் மேம்படுவதை உணரலாம். வாக்கிங் போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது தூக்க-விழிப்பு சுழற்சியை சீரமைக்கிறது. இதனால் நாம் விரிவாக தூங்கி விடுகிறோம். மேலும் இரவில் எந்த ஒரு தடையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம். ஒருவேளை உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் கட்டாயமாக இதை முயற்சி செய்து பாருங்கள்.

மாலை நேரத்தில் வாக்கிங் செல்வது நமது மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது. வழக்கமான முறையில் மாலை நேர வாக்கிங் செல்பவர்களுக்கு அறிவுத் திறன் செயல்பாடு, அதாவது நினைவாற்றல் மற்றும் கிரியேட்டிவிட்டி உள்பட மேம்படுத்தப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் தெளிவான யோசனை மற்றும் முடிவு எடுப்பதற்கான சிறந்த ஆற்றல் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பிசியான காலை வேளையில் பலருக்கு வாக்கிங் செல்வதற்கு நேரம் கிடைக்காமல் போகலாம். இது போன்ற நபர்கள் மாலை நேரத்தை வாக்கிங் செல்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்கிங் செல்வதற்கு எந்த ஒரு சிறப்பு சாதனமோ அல்லது முன்னேற்பாடோ தேவையில்லை. எல்லா வயதினரும் தாராளமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் வாக்கிங் செல்லலாம். உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு வாக்கிங் செல்வது சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லப் போனால் 6:00 மணி முதல் 8:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் வாக்கிங் செல்லலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry