பெரியண்ணன் மனப்பான்மை எடுபடாது! நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு! ஆளுநரை மிரட்டும் தி.மு.க.!

0
448

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நிலைப்பாட்டை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. `மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும்; ஆனால் அரசியலில் எடுபடாது என்பதை ஆளுநர் உணரவேண்டும்’ என திமுக சாடியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின செய்தியில் “நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மேம்பாடு மற்றும் வளரச்சிக்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் கல்வித்தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் உள்ள எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது.

தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது, அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பாக ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே, அரசு மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்தமைக்கு நன்றி, இதன் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்று பேசினார்.

இதுகுறித்து திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், சிலந்தி என்ற பெயரில், `கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில், ”தமிழக ஆளுநர் ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லையை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து அரசியல் தட்ப வெட்பங்களை உணர்ந்து அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை. காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்கு பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு தேவை, பல நேரங்களில் அந்த பாணி கைக்கொடுக்கும்; ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.

ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும் தெரிவிக்கும் முன் தமிழகத்தைப் புரிந்துகொண்டு – அதன் வரலாற்றை தெளிவாக தெரிந்துகொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது – சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்.

ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறுகிறது. மக்களும் அவர்கள் எண்ணத்தை அந்தக் கட்சி நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களிக்கின்றனர். அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும்போது, அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது, சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணரவேண்டும். அவர் தமது பொறுப்புணராது தமிழக மக்கள் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது.

பல பிரச்னைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். அதிலே ஒன்று இருமொழிக் கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாமென்பது. ஆளுநர் ரவி, இதனை உணர்ந்து உரிய தகவல்களை மேலிடத்திற்கு தந்து ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்யவேண்டும். இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், `கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா’ எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதாவது இது நாகாலந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரங்கமாக, ஆளுநர் ஆர். என். ரவியை எச்சரித்தும் சாடியும் முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் நீட் விவகாரத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீட் விலக்கு பற்றி மக்கள் மன்றம் கேள்வி எழுப்பும் முன், ஆளுநரை விமர்சித்து அதை மடைமாற்றுவதே திமுக-வின் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry