வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை, என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தம்மை எதிர்க்க வலுவான போட்டியாளர் இல்லாததால், வெற்றி சுலபமாக ‘கைகூடி’விட்டதை எண்ணி அமைச்சர் நமசிவாயம் உற்சாகத்தில் உள்ளார்.
புதுச்சேரியில் வில்லியனூர் விவிஐபி தொகுதியாகும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மங்கலம் தொகுதியை குறிவைத்திருந்த தேனி ஜெயக்குமாரை, வில்லியனூரில் களமிறக்கினார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் நமசிவாயம் களத்தில் இருந்ததார். அரசியல் ஜாம்பவான்கள் மோதியதால் வில்லியனூர் தொகுதியில் அனல் பறந்தது.
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்தி, தொகுதி மாற்றி களமிறக்கப்பட்டது போன்ற காரணங்களால் தேனி ஜெயக்குமார் தேர்தல் களத்தில் தடுமாறினார். ஆனால், தேர்தல் பணிகளில் அவர் சுணக்கம் காட்டவில்லை. அதேநேரம், காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தெம்புடன் களமாடினார் நமசிவாயம். எளிமையான அணுகுமுறை, வெற்றி பெற்றால் முதலமைச்சர் போன்ற மக்களின் எண்ண ஓட்டங்கள் நமசிவாயத்துக்கு வெற்றி தேடித்தந்தது.
எனவே, வரும் தேர்தலில், வில்லியனூர் தொகுதி கவனம் ஈர்க்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நமசிவாயமும், தேனி ஜெயக்குமாரும் மீண்டும் போட்டியிட்டால், போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டது. நமசிவாயத்தின் அரசியல் சாணக்கியத்தனத்தால், நேருக்கு நேர் போட்டியைத் தவிர்க்க, தேனி ஜெயக்குமார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அமைச்சர் நமசிவாயம், வில்லியனூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். பக்கத்து தொகுதியான மங்கலத்தில், என். ஆர். காங்கிரஸின் ‘தேனி’ ஜெயக்குமார் களமிறங்குகிறார். பரஸ்பரம் இருவருக்குமே இது சிக்கல் இல்லாமல் இருக்கும். எதிர் வேட்பாளர் பலமாக இல்லாத நிலையில், இருவரது வெற்றியும் சற்றேறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

தம்மை எதிர்க்க ஆள் இல்லாத காரணத்தால், வெற்றி ‘கைகூடிய’ உற்சாகத்தில் நமசிவாயம் வலம் வருகிறார். அதேநேரம், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரும், ‘ஒரே அணியில்’ போட்டியிடுவார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரையும், சமாதானப்படுத்திய அந்த மையப்புள்ளி எது என்பதே புதுச்சேரி அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry

