புதுச்சேரியில், போலீஸார் அரசுக்கு களங்கம் விளைவிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். போலீஸார் மக்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.
புதுச்சேரியில் போலீஸார் விரட்டி விரட்டி அபராதம் வசூலிப்பது பற்றி கடந்த 3-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது. புதுச்சேரியில் முனிசிபாலிட்டி ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீஸார் செய்கின்றனர்.
கொரோனா வழிமுறைகளை மீறுவோருக்கு அபாரதம் வசூலிப்பதற்காக போலீஸாருக்கு ரசீது புத்தகம் அச்சிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அபராதம் வசூலித்தே ஆக வேண்டும் என போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. போலீஸாரின் அதிருப்தி முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கண்டுகொள்ளவில்லை என செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
விரிவாகப் படிக்க : விரட்டி விரட்டி கட்டாய வசூல் செய்யும் புதுச்சேரி போலீஸார்! அரசு மெத்தனத்தால் காவலர்கள் வேலையிழக்கும் அபாயம்!
இந்தச் செய்தியை மறுத்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, காவலர்கள் தவறான வகையிலே மக்கள் மத்தியில் தகவல் பரப்பி அரசுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். எந்த காவல்நிலையத்துக்கும் இவ்வளவு தொகையை அபாராதமாக வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதை ஏற்க முடியாது.
காவல்துறை மக்களின் நண்பனாக இருக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு விரோதியாக செயல்படக் கூடாது என்றும் சாடியுள்ளார். அபாரதம் விதிக்கச் சொல்லி தான் உத்தரவிடவில்லை என்றும், அரசு உத்தரவிட்டதாகவும் நாராயணசாமி பேட்டியில் கூறுகிறார். முதலமைச்சராகவும், துறை அமைச்சராகவும் இருக்கும் இவர் உத்தரவிடாமல், வேறு யார் உத்தரவிட முடியும்? இதன் மூலம் யாரை சமாதானப்படுத்த முதலமைச்சர் முயற்சிக்கிறார் என்பது தெரியவில்லை.
Watch :https://youtu.be/ZML0M6GTeqo (முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி)
காவல்துறை இலாகாவை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ஆட்சிக்கு காவல்துறையினர் களங்கம் விளைப்பதாகக் கூறுவது, அந்தத்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை, அவரே ஒப்புக்கொள்வதுபோல இருக்கிறது.
வேல்ஸ் மீடியாவின் செய்தியை பாதியளவு மறுத்துள்ள முதலமைச்சர், முந்தைய செய்தியில் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அதாவது, போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ள ரசீதில், கர்சீஃப்போ, மாஸ்க்கோ அணியாவிட்டால் அபாரதம் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகத்தில் கர்சீஃப் கட்டிக்கொள்வதும், சரியான மாஸ்க் அணிவதும் ஒன்றாகிவிடுமா? கோவிட்-19 வைரஸ் ஊடுருவுவதை, சாதாரண துணியான கர்சீஃப் தடுத்து நிறுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா? அப்படி இல்லையென்றால், பெயரளவுக்கு பாதி முகத்தை மறைத்தால் போதும் என்று அரசு நினைக்கிறதா? கர்சீஃப் கட்டிக்கொண்டால் போதும் என்று அரசே கூறுவது, மக்களை தவறாக வழிநடத்துவதாக ஆகிவிடாதா? ஆகிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry