NLC விரிவாக்கப்பணி! தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் அழிக்கப்படும் பசுமை வயல்கள்!

0
66

நெய்வேலி அருகே புவனகிரி ஒன்றியம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி சுற்று வட்டார பகுதியில், நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. சுமார் 35 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணியும், கால்வாய் வெட்டும் பணியும் இன்று தொடங்கியுள்ளது.

வளையமாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிர் பிடிக்கக் காத்திருக்கும் நெற்பயிர்கள் உள்ள விளை நிலங்களில், தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் என்.எல்.சி. நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்களை இறக்கியிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலரை போலீஸார் தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Also Read : ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

பொக்லைன் பணி செய்யும் பகுதிக்குள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நுழையாத வகையில், விழுப்புரம் சரக டிஐஜி. ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. எதிர்ப்பை மீறி போலீசார் குவிக்கப்பட்டு, விளை நிலங்களை சமன் படுத்தும் பணிகளிலும், கால்வாய் வெட்டும் பணிகளிலும் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுபற்றி வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், ‘2 மாதத்தில் அறுவடைத் தயாராகும் நெற்பயிர்களை பொக்லைன் மூலம் தமிழக அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் அழிக்கிறது. இது பச்சிளம் குழந்தையை கொல்வதுபோலத்தான். நெல் அறுவடைக்குப் பிறகு நிலங்களை ஒப்படைப்பதாகக் கூறியும், விளை நிலைத்தில் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி நாசவேட்டை நடத்துகின்றனர்’ என்று கூறுகின்றனர்.

Advocate Vinoba Bhoopathy, Spokesperson – PMK

இதுகுறித்து வேல்ஸ் மீடியாவிடம் பேசிய பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் வினோபா பூபதி, “என்.எல்.சி.க்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறியதற்கு மாறாக திமுக அரசு தற்போது செயல்படுகிறது. காவல்துறையினரை குவித்து மக்களை அச்சுறுத்தி நிலம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அனல் மின்சாரத்துக்கு மாற்றாக நிறைய வழிகள் உள்ளன. அதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படியிருக்கும்போது, விளைநிலங்களை அழித்து சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.” என்று கூறினார்.

விளை நிலங்களில் கால்வாய் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்து சேத்தியாதோப்பு தனியார் மண்டபத்தில் வைத்தனர். சேத்தியாதோப்பு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “உழவர்களின் நண்பன் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry