தமிழகத்தில் கொரோனா பரவலில் பதற்றமான நிலை இல்லை! ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை!

0
5

தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவர் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தனியாருக்கு மாற்றி வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் வெளியான செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை செய்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், “அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் ரெம்டெசிவர் குப்பிகள் உள்ளது என்றார். தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் ரெம்டெசிவர் இருப்பு இல்லாமல் இருக்கலாம், அரசிடம் கேட்டால், ரூ. 4,800சந்தை மதிப்புள்ள ஒரு குப்பியை, 783 ரூபாய்க்கு வழங்க அரசு தயாராக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 400 டன் மற்றும் புதுச்சேரியில் நாளொன்றுக்கு 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது, தற்போது 1,167 டன் இருப்பு உள்ளது. ஆனால் தற்போதைய தேவை என்பது 250 டன் ஆக்சிஜன் மட்டுமே. ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் பற்றாக்குறை ஏற்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் உள்ள 9,600 வென்டிலேட்டர்களில், 5,887 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6,000 வென்டிலேட்டர்களில், 3,000 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வென்டிலேட்டர் அல்லது ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இல்லை.  எனவே தமிழகத்தில் படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் என எதிலும் பற்றக்குறை இல்லை. கொரோனா பரவலினால் பதற்றமான நிலை என தமிழகத்தில் தற்போது இல்லைஎன்று விஜய் நாராயணன் தெரிவித்தார்.

பின்னர் ஆஜரான மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “மருத்துவம் அல்லாத வேறு பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் அனுப்பக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனை பதிவு செயதுகொண்ட நீதிபதிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அறிந்து உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க அரசின் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் அல்லது சார்பு செயலாளர் தலைமையிலான குழுவை அமைத்து ரெம்டெசிவிர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பூசிகள் ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

தடுப்பூசி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒரு வருட ஊரடங்கை கருத்தில் கொண்டு, விலையை குறைத்து நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தடுப்பூசி எவ்வளவு உள்ளது என்பது குறித்த விவரங்களை ஏப்ரல் 26ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry