செப்டம்பர் 12க்குப் பிறகு தண்ணீர் திறக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு!

0
36
KRS Dam | File Image

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக  தமிழக அரசு தொடர்ந்த வழக்கு  உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை ஆகஸ்டு 29ம் தேதி முதல் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து நாளொன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்குமாறு கோரி ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆகஸ்டு 19ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை சராசரியாக வினாடிக்கு 37,869 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

Also Read : காந்தி பெரிய தலைவரானதற்கு பணம்தான் காரணம்! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆ. ராசா! Hate Speech Of Andimuthu Raja!

வினாடிக்கு 7,869 கனஅடி நீர் கூடுதலாகவே திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 740 டி.எம்.சி. நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கொண்டு, பற்றாக்குறையை நீர் ஆண்டின் இறுதியில் கணக்கிட வேண்டுமே தவிர, தமிழ்நாடு அரசு கூறுவது போல மாதந்தோறும் கணக்கிட கூடாது.

காவிரி, கிருஷ்ணா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே, காவிரி ஆணையத்தின் ஆகஸ்டு 29ம் தேதி உத்தரவை நிறைவேற்றிய பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து செப்டம்பர் 12ம் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியமில்லை.

காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றதாக அல்லது முரணாக இருக்கும்போது மட்டுமே அதை ரத்து செய்ய முடியும். காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவில் உள்ள முரணை அல்லது முறைகேட்டை தமிழ்நாடு அரசு எடுத்துக்காட்டவில்லை.

அதே சமயம் கர்நாடகத்தில் நிலவும் சூழலை ஆணையம் கருத்தில் கொள்ளாமல் பிறப்பித்துள்ள உத்தரவை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்துள்ளோம். நாள்தோறும் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை திறக்க உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்பதாலும், வழக்கமான மழைப்பொழிவு என கருதியுள்ளதாலும், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கெஜ்ரிவால் போல நிபந்தனை விதிக்காதது ஏன்? காவிரிப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!

காவிரியில் தமிழகத்திற்கு, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்து கர்நாடகா அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் தமிழக அணைகளில் உரிய நீரின்றி சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் முற்றிலுமாக கருகிப் போய்விட்டன. சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நிலையில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என்பதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய  37.9 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

இதனிடையே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை நேற்று பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வழக்கினை விசாரிக்கும் நீதிபதிகள் மூவரில், இருவர் மட்டுமே இருப்பதால் இம்மாதம் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry