ஜெயபாலனுக்கு சீட் இல்லை? மூன்று தொகுதியில் தீவிர கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு! யார் அந்த இரண்டு அதிர்ஷ்டசாலிகள்?

0
200

வரும் சட்டமன்ற தேர்தலில், தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர்  தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு செய்திருக்கும் நிலையில், ஜெயபாலனுக்கு சீட் இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸார் மத்தியில் இது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

தட்டாஞ்சாவடி முதலமைச்சர்!

தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய மூன்று தொகுதிகளும் ரங்கசாமியின் கோட்டையாக கருதப்படுபவை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இது, ரங்கசாமி கோட்டையில் விழுந்த ஓட்டை என பிற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

1990-ல் ரங்கசாமி முதல் முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில்தான் களம் இறங்கினார். தனது அரசியல் குருவான பெத்தபெருமாளிடம் 982 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 1991-ல் அதே தட்டாஞ்சாவடி தொகுதியில், பெத்தபெருமாளை எதிர்த்து 7260 வாக்குகள் அதிகம் பெற்று அசாத்திய வெற்றி பெற்றார். அன்று முதல் 2006 வரை தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில், வேலைவாய்ப்பு, உதவித் தொகை உள்பட அரசின் அனைத்து சலுகைகளும் தட்டாஞ்சாவடி தொகுதி மக்களே பெரும்பாலும் பயன் அடைந்தனர். இதனால் மற்ற தொகுதியினர் தட்டாஞ்சாவடிக்கு வாடகைக்கு வீடு எடுத்து இடம் பெயர்ந்தது தனி கதை. இதனால், ரங்கசாமியை தட்டாஞ்சாவடி முதலமைச்சர் என்று பலரும் விமர்சனம் செய்தனர்

கோட்டையில் விழுந்த ஓட்டை!

தொகுதி மறு சீரமைப்பின்போது, பெரிய தொகுதியான தட்டாஞ்சாவடி மற்றும் அதையொட்டிய தொகுதிகளின் சில பகுதிகளை சேர்த்து, இந்திராநகர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி என மூன்று தொகுதிகளாக மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மூன்று தொகுதிகளுமே ரங்கசாமியின் கோட்டையானது. இந்தத் தொகுதிகளில் அவர் யார் யாரை கை காட்டுகிறாரோ, அவரே எம்.எல்.. என்ற நிலை இருந்தது.

Ashok Anandh

2011-ல் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், தட்டாஞ்சாவடியில் அசோக் ஆனந்தும் போட்டியிட்டனர். மூன்று தொகுதிகளும் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது. ரங்கசாமி இந்திரா நகரில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உறவினரான தமிழ்ச்செல்வத்தை களமிறக்கி வெற்றிபெற வைத்தார்.

2016 சட்டமன்ற தேர்தலில், இந்திரா நகரில் ரங்கசாமியும், கதிர்காமத்தில் ஜெயபாலனும், தட்டாஞ்சாவடியில் அசோக் ஆனந்தும் களம் கண்டனர். படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என்ற நிலைமாறி, கடும் இழுபறிக்குப் பின் 3404 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ரங்கசாமி வெற்றி பெற்றார். முந்தைய தேர்தலில் 16 677 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயபாலனும் நூலிழைல் கரைசேர, அசோக் ஆனந்த் மட்டுமே சுலபமான வெற்றியைப் பெற்றார்.

தோல்வி தந்த பாடம்

கடந்த ஆண்டு நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், தொகுதிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவரை உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக ரங்கசாமி களம் இறக்கினார். 1527 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இவரும், அரசியலுக்கும் தொகுதிக்கும் புதுசு என்பதுதான் ஹைலைட். இந்தத் தேர்தல் தோல்வி ரங்கசாமியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது.

AKD Arumugam

கே.எஸ்.பி. ரமேஷ், .கே.டி ஆறுமுகத்தின் வளர்ச்சி இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது. அசோக் ஆனந்த் ஒத்துழைப்பைப் பொறுத்தே தட்டாஞ்சாவடி வெற்றி வாய்ப்பு இருக்கும். எனவே, வரும் 2021 தேர்தலில், தனது கோட்டை சரியவில்லை என்பதை காட்டுவதற்காக தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளில் வெற்றி பெறுவதை ரங்கசாமி கவுரவப் பிரச்சனையாக நினைக்கிறார். எனவே இந்தத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

ஜெயபாலனுக்கு சீட் மறுப்பு?

NSJ Jayabalan

தான் ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில், மற்ற இரண்டு தொகுதிகளிலும் புது வேட்பாளரை களமிறக்க ரங்கசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே ஜெயபாலனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்படும் என என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கதிர்காமம் தொகுதியில் ஜெயபாலன் மீது அதிருப்தி இல்லை என்றாலும், வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் என்று ரங்கசாமி நினைப்பதாகத் தெரிகிறது. எனவே, தேர்தலில் சீட் கொடுக்கமால், ஆட்சி அமைந்தால் நியமன எம்.எல்.. பதவி கொடுக்கலாம் என்று ரங்கசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இருமுறை உறவினர்களை இறக்கி சூடு பட்டுவிட்டதால், இந்த முறை கட்சிக்காரர்களை களமிறக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் கட்சியில் விசுவாசமாக இருக்கும் இருவருக்கு, ரங்கசாமியின் கோட்டையின் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இதனால் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். யார் அந்த இரண்டு அதிர்ஷ்டசாலிகள் என்ற விவாதமே என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் பிரதானமாக உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry