விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். ‘தளபதி 65′ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்‘. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்திருந்தார்.
இதற்காக பல இயக்குநர்கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் விஜய் நடிக்கச் சம்மதித்தார். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார்.
இதனால், ‘தளபதி 65′ என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. விஜய் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் ஸ்டைலான லுக்குடன் புதிய வீடியோவும் வந்துள்ளது.
We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 pic.twitter.com/7Gxg1uwy22
— Sun Pictures (@sunpictures) December 10, 2020
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார். ஒருவழியாக நீண்ட நாட்களாக நிலவி வந்த ‘தளபதி 65′ இயக்குநர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் #Thalapathy65 என ட்ரெண்ட் அடித்து வருகின்றனர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்‘ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியதுள்ளது. அதனை முடித்துக் கொடுத்துவிட்டு, விஜய் நடிக்கும் படத்தின் பணிகளை நெல்சன் கவனிக்கவுள்ளார். ‘கோலமாவு கோகிலா‘, ‘டாக்டர்‘ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கவுள்ளதால், நெல்சனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry