வெங்காய விலை உயரத் தொடங்கியிருப்பது மக்களுக்கு மீண்டும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி மொத்த விற்பனையில் 5 கிலோ வெங்காயம் ரூ.350க்கு விற்பனையாகிறது.
இதுபற்றி கூறும் டெல்லி காசிபூர் சந்தையைச் சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள், “வெங்காய வரத்து குறைந்துவிட்டது. அதனால்தான் விலை உயர்கிறது. நேற்று 5 கிலோ ரூ.300க்கு விற்றோம். இன்று ரூ.350க்கு விற்கிறோம். தொடர்ந்து வரத்து குறைவாக இருப்பதால் விலை ஏறி வருகிறது” என்றனர்.
சில்லறை வியாபாரி ஒருவர் கூறும்போது, “காசிபூர் சந்தையில் இருந்து மொத்தமாக வெங்காயம் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்வோம். நவராத்திரிக்கு முன் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்றது. இன்று ரூ.70க்கு விற்கிறது. நாங்கள் இதை கடைகளில் ரூ.80க்கு விற்பனை செய்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கிலோ ரூ.100-ஐ எட்டும். தக்காளி விலையும் இப்போது ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40 ஆக அதிகரித்துள்ளது” என்றார்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வருகிறது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் வந்துகொண்டிருந்தது. தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆயுத பூஜைக்கு முன்பு கிலோ 20 ரூபாயாக இருந்த வெங்காயம், நாள்தோறும் அதிகரித்து தற்போது 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ 110 முதல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. தீபாவளி வரையில் இந்த விலை உயர்வு நீடிக்கும் எனவும், அதன் பின் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கோயம்பேட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது. வெங்காயம், தக்காளி விலை மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த 10 நாட்களை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
அக்டோபரில் சந்தைக்கு வந்திருக்க வேண்டிய காரிப் பயிர் வெங்காயம் தாமதமாகிறது. ஜூன் – ஜூலை மாதங்களில் பருவமழை தொடங்கும்போது காரிப் பருவம் தொடங்குகிறது. இதனை பருவமழை விதைப்பு காலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருசில பகுதிகளில் இயல்பைவிட மிகமிகக் குறைவாகவும், சில இடங்களில் இயல்புக்கு மாறாகவும் பெய்துள்ளது.
இதனால் காரிப் பருவ விதைத்தல் தள்ளிப்போனதால் அந்தப் பருவத்தில் பயிராகி சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதேபோல், ஏற்கெனவே கையிருப்பில் உள்ள ராபி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயமும் கரைந்து வரும் சூழலில் விலையேறுவதாக வெங்காய வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில்லறை விற்பனையில் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் விடுவித்து வருகிறது. இருப்பினும் பண்டிகை கால நுகர்வு அதிகமாக இருப்பதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் விலை உயர்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry