காகிதத்தை அடிப்படையாக வைத்து 5 நிமிடத்தில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும், புதுமையான கருவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தக் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி தீபாஞ்சன் பான் என்பவர் தலைமை வகித்தார். தீவிர முயற்சிக்குப் பின்னர், காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘அல்ட்ராசென்சிடிவ் கோவிட் 19’ பரிசோதனை முறையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘ஏசிஎஸ் நானோ’ இதழில் வெளியாகி உள்ளது.
கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய காகிதத்தில் ‘எலக்ட்ரோகெமிக்கல் சென்சார்’ஐ அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். கார்பன் அணுக்களை அடர்த்தியாகக் கொண்ட, ஒரே ஒரு லேயருடன், அல்ட்ராசென்சிடிவ் பயோசென்சார் மற்றும் வைரஸ் தொற்றை உணர்ந்தறியும் மின்சார உபகரணம் என இரண்டும் இணைந்த இந்தக் கருவி 5 நிமிடத்தில் பரிசோதனை செய்து முடிவுகளைத் துல்லியமாகத் தெரிவிக்கும்.
கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள், இல்லாதவர்கள் என இருதரப்பினரிடம் இருந்தும் மாதிரிகளை எடுத்து இந்தக் கருவியில் விஞ்ஞானிகள் குழவினர் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் துல்லியமாக முடிவுகள் கிடைத்துள்ளன. தொற்று இருப்பவர்களின் மாதிரிகள் இருந்தால், இக்கருவியில் உள்ள சென்சார் மின்சார சிக்னல்களை அதிகமாகக் காட்டும். இதன்மூலம் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படும். இந்தக் கருவியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். விலையும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry