என்ன செய்யப்போகிறார் ஜான்குமார்? திமுக-வா? பாஜக-வா? | ‘வேல்ஸ் மீடியா’வின் பிரத்யேக அலசல்!

0
43

ஜான்குமார் எம்.எல்.. எந்தக் கட்சிக்கு செல்லப்போகிறார் என்பதுதான் புதுச்சேரி அரசியலின் தற்போதைய பேசுபொருள். முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக மிக நெருக்கமாக அறியப்பட்ட ஜான் குமாருக்கு, கட்சி மாற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அவருக்கான அடுத்த வாய்ப்புகள் என்னவாக இருக்கலாம்? என்பதைப் பற்றிய பார்வையாகவே இந்தக் கட்டுரை இருக்கும்.

அதிருப்தி ஏன்?

அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஜான்குமார் ஒதுங்கியே இருக்கிறார். முதலமைச்சருக்காக எம்.எல்.. பதவியை துறந்தும், விசுவாசமாக இருந்தும், அமைச்சர் பொறுப்போ அல்லது அரசில் மதிப்புமிக்க எந்தப் பதவியையோ தரவில்லை என்பது ஜான்குமாருக்கு வருத்தமாகவே இருந்துவந்தது. மற்றவர்களைப் போல நாராயணாசமி தம்மையும் நடத்துகிறாரே என்பதுதான் அவரது மனத்தாங்கலுக்கு முக்கியக் காரணம்.

பாஜக மேலிடப் பொறுப்பாளருடன் சந்திப்பு

கடந்த 7-ந்தேதி புதுச்சேரிதிண்டிவனம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை ஜான்குமார் சந்தித்து பேசினார். இதுபற்றிய தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பரவி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

தந்தையும், தனயனும் களமிறங்க முடிவு!

வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பாக நெல்லித்தோப்பு தொகுதியில் அவரது மகனும், காமராஜர் தொகுதியில் ஜான்குமாரும் போட்டியிடுவார் என்ற பலமாகவே பேசப்பட்டது. அதேநேரம் பாஜக சார்பில்தான் இருவரும் போட்டியிடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஜான்குமாரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

என்.ஆர்.காங்கிரஸ்அதிமுகபாஜக கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், ஜான்குமார் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட முடியாது. காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லிதோப்பு, காமராஜர் நகர் ஆகிய 2 தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிட்டது. தற்போது நெல்லித்தோப்பு தொகுதியில், மாநில அதிமுக அமைப்பாளர்களில் ஒருவரான ஓம்சக்தி சேகர் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே எம்.எல்.வாக இருந்ததாலும், கூட்டணி தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும் அவருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவேதான்,  என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவை தனித்துப் போட்டியிட வைப்பதில் ஜான்குமார் ஆர்வம் காட்டுகிறார். இது நடக்கும்பட்சத்தில், நெல்லித்தோப்பு தொகுதியில் மகனையும், காமராஜர் நகர் தொகுதியில் தாமும் போட்டியிட முடியும் என அவர் நினைக்கிறார். தனிப்பட்ட செல்வாக்குதான் தம்மை வெற்றிபெற வைக்கிறது என்பதையும் அவர் திடமாக நம்புகிறார்

என்.ஆர்.காங்கிரஸ்அதிமுகபாஜக கூட்டணி நீடிக்கும் பட்சத்தில், ஜான்குமாருக்கு உள்ள அடுத்த வாய்ப்பு தாய் வீடான திமுகதான். தற்போதைய சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் தனித்துக் களமிறங்க ஆயத்தமாக இருக்கும் ஒரே கட்சி திமுகதான். ஜான்குமார் முகாம் மாறினால், திமு-வில் அவருக்கு சாதகமாக சூழல் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவும் இல்லை என்றானால், தானும், மகனும் சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றி பெற, இரு தொகுதிகளிலும் தாம் ஏற்கனவே செய்திருந்த நலத்திட்ட உதவிகள் கைகொடுக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார். தொங்கு சட்டசபை அமைந்தால், தனக்கு சாதகமான கட்சிக்கு ஆதரவு கொடுத்து, அமைச்சரவையில் இடம்வாங்கிவிட வேண்டும் என்பதும் அவரது கணக்காக இருக்கிறது. ஜான்குமார் தேர்ந்தெடுக்கப்போவது திமுகவையா அல்லது புதிய பாதையையா? விரைவில் விடை தெரிந்துவிடும்.

என்ன சொல்கிறார் புதுச்சேரி காங். தலைவர்?

வருமான வரித்துறை சோதனையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே ஜான்குமார் ஆறு மாதங்களுக்கு முன்புகூட பாஜக பொறுப்பாளர்களை ரகசியமாகச் சந்தித்துள்ளார். இது கட்சித் தலைமைக்கும் தெரியும். ஜான்குமாரின் பலமும், பலவீனமும்  கட்சிக்கு ஏற்கெனவே தெரியும். ஜான்குமார் தனது முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லதுஎன்று தெரிவித்துள்ளார்.

ஜான்குமாரின் கருத்தும், சவாலும்!

ஏற்கெனவே பெங்களூருவில் 2 முறை பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவைச் சந்தித்துள்ளேன். தற்போதைய சந்திப்பு கட்சி ரீதியான சந்திப்பு இல்லை. தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். தற்போது வரை காங்கிரஸில்தான் நீடிக்கிறேன். உண்மையில் நான் ஏமாற்றப்பட்டவன்.

எனக்குச் சாதகமற்ற சூழ்நிலை நிலவினால் 100 சதவிகிதம் காங்கிரஸை விட்டு விலகுவேன். என்னால் 5 எம்.எல்.ஏ-க்களை உருவாக்க முடியும். என்னுடைய தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியுமா? என்ற கேள்வியைச் சவாலாகவே விடுக்கிறேன். தேர்தலின்போது உரிய மரியாதை தரப்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும் தயங்கமாட்டேன். காமராஜரையே ஓரம்கட்டிய கட்சிதான் காங்கிரஸ்என்கிறார் ஜான்குமார். டெல்லி மேலிடம் சமாதானப்படுத்தினால் அவர் காங்கிரஸிலேயே நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry