
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் பாராட்டுக்குரிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள போதிலும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் களத்தில் இல்லை என்ற வாதம் அரசு மருத்துவர்களின் தரப்பிலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்துவமனைகளில் சுமார் 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும், சுமார் 4 ஆயிரம் பேர் பற்றாக்குறை. செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை.
இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதர பணியாளர்களுக்கும் பஞ்சமாக இருப்பதால் அரசு மருத்துவமனைகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன. அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடத்திய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சுகாதாரமற்ற கழிப்பறைகள், கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்யுமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றை மாதம் ஒருமுறை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு அறிவுறுத் தினார். சுகாதாரத்துறையின் இந்த நடவடிக்கையை அரசு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளையிடம் பேசியபோது, “தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவமனைகளும், கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ப மருத்துவர், செவிலியர், இதர பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

தற்போது தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 850 மகப்பேறு மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் குறைவான அளவே மருத்துவர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தினமும் சுமார் 2 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகிறது. அதனால், அங்கு மகப்பேறு மருத்துவர் பணியிடங்களை 2 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சி வந்த பின் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை எண் 354ன்படி ஊதிய உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் மூன்றரை ஆண்டுகள் கடந்த பிறகும் அதைப்பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை.” என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் 18 ஆயிரம் அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இதில் சுமார் 20% இடங்கள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறையே தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவர் தனது துறை சார்ந்து மட்டுமல்லாமல் பிற வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு என அனைத்தையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு நோயாளியிடம் குறைந்தது 15 நிமிடங்களையாவது மருத்துவர் செலவிட வேண்டும், ஆனால் மூன்று மணிநேரம் வெளி நோயாளிகள் பிரிவில் செலவிட்டு 60-70 வெளிநோயாளிகளைப் பார்த்துவிட்டு, வார்டுக்கு செல்லும்போது எப்படி நேரம் ஒதுக்க முடியும்?
Also Read : மோசமான நிலையில் தமிழக சுகாதாரத்துறை! அமைச்சரின் நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரிப்பு!
கொரோனா காலத்துக்குப் பிறகு, மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரும் அரசு மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். ஒருபுறம் சேவைகளை மேம்படுத்தும்போது, அதற்கு ஏற்ற மனித வளங்களையும் அதிகரிக்க வேண்டும். அதைச் செய்யாததே பிரச்னைகளுக்குக் காரணம். மருத்துவர்களின் வேலைப்பளு நீண்டநாள் பிரச்னை என்றாலும், கொரோனா காலத்துக்குப் பிறகு அது தீவிரமடைந்திருப்பதால், மருத்துவர்களிடம் விரக்தியும் அதிகரித்துள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு இதுவும் காரணமாக அமைகின்றன.
பணிச்சுமை மட்டுமே பிரச்னையில்லை, சரியான நேரத்திற்கு சிகிச்சையைத் தொடங்க முடியாமல், அதனால் இழப்பு ஏற்பட்டால் எங்களுக்கு அது உணர்வுச் சுமையாக மாறுகிறது. மருத்துவமனையின் அன்றாடச் செலவுகளுக்கான நிதியை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்தான் பெற வேண்டியுள்ளது. சில நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் தாமதமாக நிதி தருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு பிரீமியம் கட்டுகிறது.” என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry