சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய ஒரு பிரிவினரை காரணமில்லாமல் இந்திய வரலாறு மறைத்துவைத்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தவைஃப்கள்(Tawaifs) அல்லது தேவதாசிகளின் பங்கு நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.
இவர்களின் பங்களிப்பு எந்தப் பள்ளி நூல்களிலும் இடம்பெறவில்லை. தவைஃப் என்ற சொல் இப்போது அவதூறாகப் பயன்படுத்தப்படுவதால் இது காரணமாக இருக்கலாம். காலனித்துவ சக்திகளின் வருகைக்கு முன், தேவதாசிகள் கண்ணியமான பெண்களாக இருந்தனர். அவர்களை கலையில் சிறந்த, படித்த, திறமையான மற்றும் உன்னத கதாநாயகிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.
கோவாவில் நாய்கின்கள், தெற்கில் தேவதாசிகள், வடக்கில் தவைஃப்கள் மற்றும் வங்காளத்தில் பைஜிகள் என்று அழைக்கப்படும், உயர்தர சமூகத்தை மகிழ்விக்கப் பாடி நடனமாடும் இந்த தொழில்முறை பொழுதுபோக்கு கலைஞர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் போது “நாட்ச் கேர்ள்கள்” என்று அழைக்கப்பட்டனர். 19ம் நூற்றாண்டில் அவர்களின் தொழில் விபச்சாரமாக மாற்றப்பட்டது. இதனால்தான் இந்திய பாரம்பரிய கலைக்கான அவர்களின் பங்களிப்பு காற்றில் மறைந்தது, இந்திய வரலாற்றின் பக்கங்களிலும் அவர்களைப் பற்றிய சரியான குறிப்பைக் காணவில்லை.
1806-ல் நடந்த வேலூர் கலகம்தான் இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டது. இந்திய வீரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆக்ரோஷமான கிளர்ச்சியைத் தொடங்கினர். வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது, மேலும் இருநூறு பிரிட்டிஷ் துருப்புக்கள் 24 மணி நேரத்திற்குள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 1857 முதல் 1859 வரை, முதல் சுதந்திரப் போர் என்று வி.டி. சாவர்கரால் குறிப்பிடப்பட்ட சிப்பாய் கலகம் அல்லது சிப்பாய் கிளர்ச்சி மீரட் நகரத்தில் தொடங்கியது. பிரிட்டிஷ் மக்களுக்காக பணிபுரியும் இந்திய சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கிளர்ச்சி கான்பூர், ஆக்ரா, டெல்லி, லக்னோ உள்பட பல நகரங்களுக்கு விரிவடைந்தது. இது தோல்வியடைந்த கிளர்ச்சியாக இருந்தாலும், அதில் பங்கேற்ற பலரை வரலாறு அடையாளப்படுத்தவில்லை. இந்தக் கிளர்ச்சியில் தேவதாசிகள் பங்கு மறைக்கப்பட்டுள்ளது.
1857ல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின்போது அதிகளவு போராட்டங்களால் போர்க்களமாக மாறிய நகரங்களில் கான்பூரும் முக்கியமானதாகும். ராணி லக்ஷ்மி பாய், தாத்யா தோபே மற்றும் நானா சாஹேப் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் துணிச்சலையும், நினைவுகளையும் கொண்ட நகரமான கான்பூரின் தெருக்களில் இருந்து அத்தகைய ஒரு தவைஃப் அதாவது தேவதாசி முதல் சுதந்திரப் போரில் பங்குபெற்றுள்ளார்.
1832 இல் லக்னோவில் பிறந்த அஜிஸூன் தாயார் சிறு வயதில் இறந்துவிட, சதுரங்கி மஹாலில் ஒரு தவைஃப் வீட்டில் வளர்க்கப்பட்டார். அங்கு அவர் பாரம்பரிய கலைகள், இசை மற்றும் நடனங்களில் தீவிரமாக பயிற்சி பெற்றார். பின்னர், கான்பூருக்குச் சென்று, உம்ராவ் பேகத்தின் வீட்டில் உள்ள லுர்கி மகில் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
முதல் சுதந்திரப்போரில் அஜிஸுன் நிசா தாசிகளின் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் இலக்கியம் மற்றும் கலைகளைப் பற்றி மட்டும் அறிந்தவர் அல்ல, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தாக்குதலை திட்டமிடும் திறன் கொண்டவராகவும் இருந்துள்ளார். பல திறமையான முடிவுகள் மூலம் தான் ஒரு தந்திரசாலி என்பதை நிரூபித்துள்ளார். மேலும், தனது அழகையும், அறிவையும் பயன்படுத்தி பிரிட்டிஷ் வீரர்களிடமிருந்து அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் பெற்று இந்திய சிப்பாய்களுக்கு அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களுக்குள் இரகசிய சந்திப்புகளை நடத்துவதற்கு அடிக்கடி அஜிசுன் நிசாவின் இருப்பிடத்தை பயன்படுத்தியுள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்து விநியோகித்ததைத் தவிர, அவர் பெண்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்ததாக நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஏதுவான இடம் ஒன்றில் அஜிசுன் பாய் தனது தலைமையகத்தை நிறுவினார். அவர் வீரர்களுடன் தங்கியிருந்தார், தேவை ஏற்பட்டபோது, துப்பாக்கிகளுடன் போர்க்களத்தில் புகுந்தார்.
இதுபற்றி குறிப்பிடும் வரலாற்று ஆய்வாளர் லதா சிங், “அஜிஸுன் நிசா ஒரு ஆண் போல் உடை அணிந்தார். அவர் சிப்பாய்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், மேலும் 1857 [கிளர்ச்சி] போது, அவரது இடம் முக்கியமானதாக மாறியது. கிளர்ச்சி நடந்த கான்பூரில், பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் குழந்தைகளை படுகொலை செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த போராட்டத்தில் அஜிசுன் நிசா என்ற தேவதாசியின் பங்களிப்புகள் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. அஜிசுன் நிசாவின் கதை புறக்கணிக்கப்பட்ட தேவதாசிகளின் கதைகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே. சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கு மிகவும் தீவிரமாக இருந்தது, கிளர்ச்சியை அடக்கிய பிறகு, பிரிட்டிஷ் அரசு அவரைக் குறிவைத்தது. அவரது சொத்துகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பறிமுதல் செய்யப்பட்டன.
அஜிசுன் நிசா ஆங்கிலேயர்களால் கைதியாகப் பிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கிளர்ச்சியின் முக்கிய சதிகாரர்களில் அஜிசுன் நிசாவும் ஒருவர் என்று குற்றம்சாட்டி, அவர் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், அவளுடைய தைரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, ஏனென்றால் அவர் ஒருபோதும் ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை. ஆனால் அவர் தூக்கிலிடப்பட்டதை ஆவணங்கள் உறுதிப்படுத்தவில்லை.
Image Source : The Citizen.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry