தலைமை அலுவலக சீலை அகற்றக்கோரி வழக்கு! ஓபிஎஸ் மீது போலீஸில் புகார்!

0
241

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தால் அழைத்து வரப்பட்டவர்கள் இடையே மோதல் நடந்தது. இதனால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் பூட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகம் முன்பு நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது 3 தனித்தனி பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பு புகாரின் அடிப்படையில் பழனிசாமி ஆதரவாளர்கள் மீதும், பழனிசாமி ஆதரவாளர்கள் புகாரின் பேரில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 300 ரவுடிகளுடன் அத்துமீறி நுழைந்து, கதவை உடைத்து, விலையுயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை அள்ளி சென்றதாக போலீசில் அளித்த புகாரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry