சென்னையில் தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அலுவலகத்தின் உள்ளே மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம் நகரைச் சேர்ந்த வினோத் (எ) கூர்கா வினோத்(38) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு, அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் உயிருடன் விளையாடுவதாகவும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் வினோத் கூறியுள்ளதாக தெரிகிறது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2017-ம் ஆண்டு டாஸ்மாக் கடை ஒன்றிலும், தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோத்தை யாரேனும் தூண்டிவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசச் சொன்னார்களா என்பதையும் போலீஸார் விசாரிக்கின்றனர். அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பாஜக அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராம் தெருவில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், தலைநகர் சென்னை அமைதிப் பூங்காவாக இருப்பதாகவும் ஆட்சியாளர்கள் கூறிவரும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தியாகராய நகரில் வசிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன், “தொடர்ச்சியாக பாஜக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது, இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது” என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry