கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒப்பீட்டளவில் குறைந்துள்ள போதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக, அனைத்து உற்பத்தி மற்றும் நுகர்வோர் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பின் விலையை உயர்த்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் அதிகரித்து 99.39 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 104.5 டாலராக உள்ளது. 139 டாலரில் இருந்து 99 டாலர் வரையில் குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுதான் வருகிறது.
ரஷ்யா விற்பனை செய்ய உள்ள தள்ளுபடி விலை கச்சா எண்ணெய், ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில்தான் இந்தியாவுக்குக் கிடைக்கும். இதனால் ஜூலை மாதத்திற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1-ம் தேதி வணிக எரிவாயு சிலிண்டர் விலை 268 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 137 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 406 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலையேற்றம் உணவுத் தொழிலை பெருமளவு பாதிக்கிறது. இது ஒருபுறமிருக்க, டீசல் விலை உயர்வால் மளிகை பொருட்களின் விலையும் கூடியுள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை 6-ம் தேதி முதல் 10 சதவீதம் வரை உயர்த்த ஹோட்டல் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கச் செயலர் ஆர்.ராஜ்குமார் கூறும்போது, “வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,200 ஆக இருந்தது. இப்போது ரூ.2,406 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சமையல் எண்ணெய் ரூ.120-க்கு கிடைத்தது. இது தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று ஏராளமான மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சரிவைச் சந்தித்த ஓட்டல் தொழில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் ஓட்டல்களை ஒட்டுமொத்தமாக மூடும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் உணவக உரிமையாளர்கள் மட்டுமல்லாது, ஏழை மற்றும் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, குறைந்தபட்சம் 10 சதவீதமாவது உணவுகளின் விலையை உயர்த்தினால் மட்டுமே ஓட்டல்களை நடத்த முடியும். இது தொடர்பாக வரும் 6-ம் தேதி சென்னையில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் முடிவெடுத்து, அன்று முதல் 10 சதவீதம் விலை உயர்வை அறிவிக்க இருக்கிறோம்” என்று கூறினார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 13 முறை விலை உயர்ந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.110.09 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ரூ.100.18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, ‘எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்வதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த நெருக்கடிக்கு பாரதிய ஜனதாதான் காரணம். உத்தரபிரதேச தேர்தலில் வென்றதற்கு நாட்டு மக்களுக்கு பாரதிய ஜனதா கொடுத்துள்ள பரிசு இது’ என்று சாடினார். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry