சான்றிதழ் காணாமல்போனால் NOC வழங்க புதிய நடைமுறை! ‘செல்ஃபோன் டவர் லொகேஷன்’ ஆய்வு செய்ய முடிவு!

0
188

ஆவணம், வாகனம், சான்றிதழ்கள் காணாமல் போனால், தடையில்லா சான்றிதழ் பெற ‘செல்ஃபோன் டவர் லொகேஷன்’ அவசியம் என்ற புதிய நடைமுறையை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

சொத்து ஆவணங்கள் காணாமல் போனால், அதுதொடர்பாக தடையில்லா சான்றை குற்ற ஆவண காப்பக போலீஸார்தான் வழங்க வேண்டும். அண்மைக் காலமாக பலர், ஆவணங்கள் காணாமல்போகாத நிலையில், அல்லது பிறரின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில், சென்னை குற்ற ஆவணக் காப்பக போலீஸாரிடம் விண்ணப்பித்து, தடையில்லா சான்று பெற முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இத்தகைய மோசடிகளை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைக்காக புதிய வழிகாட்டுதல்களை சென்னை குற்ற ஆவண காப்பக போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

அதன்படி, ஆவணம், வாகனம், சான்றிதழ்கள் காணாமல் போனதாக குறிப்பிட்டு, அதை புதிதாக பெறுவதற்காக தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தால், புகார் அளித்தவர் கூறுவது உண்மையா? என குற்ற ஆவண காப்பக போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள்.
குறிப்பாக புகார்தாரர் ஆவணங்களைத் தவற விட்டதாக குறிப்பிட்ட இடத்துக்கு அப்பகுதி காவல் நிலைய போலீஸாருடன் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆராய்வார்கள். அதைத் தொடர்ந்து, தவற விட்டவரின் செல்போன் எண்ணைப் பெற்று, சம்பவத்தன்று சம்பவ இடத்தில் அவர் இருந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்தாரா? என்பதை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் டவர் லோக்கேஷன் எடுப்பார்கள்.

மேலும், ஆவணம் தொலைந்து போன புகாரை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 3 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்படும். இவைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதுகுறித்த தொடர் விசாரணையில் உண்மைத் தன்மை வெளியாகிவிடும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள், வாகனங்கள், ஆவணங்கள் திருடப்பட்டால் அல்லது தவறவிட்டால் மற்றும் தொலைந்து போனால், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட குற்றப்பிரிவு போலீஸார் முதல்கட்டமாக புகார் மனுவைப்பெற்று விசாரணை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு 19 வழிகாட்டுதல்களை காவல் ஆணையர் வழங்கியுள்ளார். காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக காவல்நிலைய போலீஸாரின் விசாரணை நடைபெறும். அதைத் தொடர்ந்து குற்ற ஆவணக் காப்பக போலீஸார் தடையில்லா சான்று வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry