வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே முதல்வருக்கு கவலை! சொத்து வரியை மத்திய அரசு உயர்த்தச் சொல்லவில்லை!

0
95

“நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்” என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை. 4-வது அலை ஜூனில் வரும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமே தெரிவித்திருக்கின்ற நிலையில், சொத்து வரியை உயர்த்தியிருப்பது, மக்களை கண்ணீரில் மிதக்கவிடுகின்ற செயலாகும்” என்று கூறியுள்ளார்.

திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர், நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

மில்களில் வேலை இல்லை. தொழிற்சாலைகளில் வேலை இல்லை, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இப்படி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு சொத்து வரி சுமையை திமுக அரசு சுமத்தியிருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் என்ன நிலவரம் என்பதுகூட தெரியாமல் இருக்கிற ஒரே முதலமைச்சர் தமிழக முதல்வர் தான்.

கொரோனா தொற்றால் இரண்டாண்டு காலம் வேலை இல்லாமல் வாழ்வாதாரமே இழந்து இருக்கிற நிலையில், மக்கள் விரோத அரசு, மக்கள் மீது மிகப்பெரிய வீட்டு வரிச்சுமையை சுமத்தியிருக்கிறது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் இப்படி வரி உயர்வு உயர்த்தப்படும் போதெல்லாம் மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்வார்கள். எப்போது உயர்த்த வேண்டும்? அதனால் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பாதிப்பு ஏற்படுமா? என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்றவாறு வருகை உயர்த்துவார்கள்.

ஆனால் இன்றைய அரசாங்கத்துக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொன்னதாக சொல்கிறார்கள். அப்படி எதுவும் மத்திய அரசு சொல்லவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாது என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு அதற்கு மாறாக இப்போது கடுமையாக உயர்த்திருக்கிறார்கள். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry