பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு! வாகனத்தை கவனமாகப் பராமரிக்காவிட்டால் சிக்கல்!

0
25

கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பதால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ளுமாறு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க இயற்கையாக கரும்புச் சாற்றிலிருந்து கிடைக்கும் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு அனுமதியுடன் 10%  எத்தனால் கலந்து விற்கப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக இந்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிக்கின்றன.

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தைத் தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும், பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் கசிந்து உட்புகாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்கச் சிறிதளவு தண்ணீர் போதுமானது. இது வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் உள்ள பெட்ரோலில் உள்ள எத்தனாலைத் தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்க்கின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். அதனால் உங்கள் வாகனத்தை இயக்குவது கடினமாக இருக்கும் அல்லது ஓட்டும்பொழுது வாகனங்களில் அதிர்வு (ஜெர்க்) ஏற்படக்கூடும்.

விற்பனையாளர்களாகிய நாங்கள் தீவிர தரக் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்து பெட்ரோலை விநியோகம் செய்து வருகிறோம். ஆதலால், வாடிக்கையாளர் தங்கள் வாகனங்களில் டேங்க்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு. வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்தில் இருந்தும் பெட்ரோல்/ டீசல் தரத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆனால், வாகனம் பெட்ரோல் விற்பனை நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதனைத் தங்கள் மேலான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry