நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமானது! ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!

0
9

நாடு முழுவதும் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15ம் தேதி வரைகால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது.

ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம். தற்போது 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

Also Read :இரண்டு ஆண்டுகளில்சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”| GPS மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்!

ஃபாஸ்டேக் முறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஃபாஸ்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்ய முற்பட்டால் அதன் சர்வர் செயல்படாமல் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். சர்வர் செயல்படவில்லை எனக் கூறினால் கூட அதனை ஏற்காத சுங்கச்சாவடி ஊழியர்கள் இருமடங்கு கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக புகார் கூறுகின்றனர்.

மேலும் டோல்கேட் ஊழியர்கள் மரியாதையாக பேசுவதில்லை என்றும், ஃபாஸ்டேக் சர்வர் செயல்படாத குற்றச்சாட்டுக்கு உரிய பதில் அளிப்பதில்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். வாடகைக்கு வாகனம் ஓட்டுபவர்கள், இதுபோன்ற சூழலில் இருமடங்கு பணத்தை எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல், ஃபாஸ்டேக் உள்ள வாகனங்கள், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்துசென்று, சில மணி நேரத்தில் அதே சுங்கச்சாவடியை திருப்பிக் கடக்கும்போது, இரண்டு முறையும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற குறைபாடுகளை அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry