மருத்துவத்துறையில் புதிய அத்தியாயமான டிஜிட்டல் சுகாதார திட்டம்! E-Pharmacyகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு!

0
43

டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் பிரத்யேக ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு, சுகாதார அடையாள அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, சண்டிகர் உள்பட 6 யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமரின் மின்னணு மருத்துவ திட்டம், நாடு தழுவிய இயக்கமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயமாக இந்தத் திட்டத்தின் விரிவாக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் சுகாதார வசதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்ட திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் துவங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும் பங்கு வகிக்கும். நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் விரிவுபடுத்தப்பட்டு வலுவான தொழில்நுட்பத் தளத்தால் வழங்கப்படுகிறதுஎன்று பேசினார்.

டிஜிட்டல் சுகாதார திட்டம் என்பது மக்களின் மருத்துவ தகவல்கள் டிஜிட்டலாக பாதுகாத்து, சுகாதார அடையாள அட்டை கொடுப்பதாகும். பிரதான் மந்திரி டிஜிட்டல் ஹெல்த் மிஷன் என்ற திட்டத்தின் கீழ், இதற்காக நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், 14 இலக்க பிரத்யேக ID உருவாக்கப்படும். பயனர்களின் ஆதார் அல்லது மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இந்த 14 இலக்க எண் உருவாக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையப் புள்ளியாக இந்த ID இருக்கும்.

பிரதான் மந்திரி டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் இந்த இயக்கமானது, https://ndhm.gov.in/ இணையதளத்தை அடிப்படையைகாகக் கொண்டு ஒவ்வொருக்குமான Electronic Medical Recordஐ உருவாக்கும். மருத்துவர்கள் அந்த பதிவுகளைப் பார்த்து, சிகிச்சை அளிக்க இது உதவும். இந்தத் திட்டம் மருத்துவத்துறைக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்களின் செலவுகளை குறைப்பதுடன், அலோபதி மட்டுமின்றி அனைத்து வகையான மருத்துவம் தொடர்பான கொள்கைகளை வகுப்பவர்களுக்கு இந்தத் தரவுகள் பெரும் உதவி செய்யும்.

அதாவது, தனித்துவமான டிஜிட்டல் ஹெல்த் ஐடி, ஹெல்த்கேர் தொழில் வல்லுநர்கள் பதிவு, சுகாதார வசதி பதிவு மற்றும் மின்னணு சுகாதார பதிவுகள் ஆகியவற்றை உள்ளடிக்கி இந்தத் திட்டம் செயல்படும். நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம் சுகாதாரத்திற்கான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதாகும். இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில், டெலிமெடிசின் மற்றும் இமருந்தகங்களை அதாவது e-pharmaciesகளை ஒருங்கிணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

சுகாதார ஐ.டியை உருவாக்கும்போது, இருப்பிடம், குடும்பம்/உறவு மற்றும் தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட சில அடிப்படை விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொருவரின் மருத்துவத் தகவல்கள் பதிவேற்றப்படும். பயனர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இவையணைத்தும், சுகாதார அடையாள அட்டையுடன் இணைக்கப்படும். இது ‘Personal Health Record-System (PHR)’ என்று அழைக்கப்படும்.

சீரான இணையவழி தளத்தை ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் இலக்காக கொண்டுள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபர் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும். மக்களின் அனுமதி பெற்று அவர்களது மருத்துவ ஆவணங்களை அணுகுவதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் இந்த இயக்கம் வழிசெய்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry