பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்! எந்தெந்த தொழில் செய்வோர் பலன் பெறலாம்? ரூ.13,000 கோடி திட்டத்தின் நோக்கம் என்ன?

0
285
PM Vishwakarma Yojana 2023

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், “விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், PM Vishwakarma என்ற இந்தத் திட்டத்திற்கென 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி, பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, குரு – சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும், கைளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள், குடும்பம் சார்ந்து இயங்குவதை வலுப்படுத்துவதும்தான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விற்பனைச் சங்கிலியுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் பிற நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!

இரும்புக் கொல்லர்கள், பொற்கொல்லர்கள் உட்பட 18 வகையான தொழில் செய்வோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை கிடைக்கும். மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். முதற்கட்டமாக, பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்பவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள்.

* தச்சர்கள்
* பொற்கொல்லர்கள்
* குயவர்கள்
* சிற்பிகள், கல் தச்சர்கள்
* காலணி தைப்பவர், காலணி தொழிலாளார், காலணி செய்பவர்கள்
* கொத்தனார்கள்
* கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு திரிப்பவர்கள்
* பாரம்பரியமாக பொம்மை செய்பவர்கள்
* முடி திருத்தும் தொழிலாளர்கள்
* பூமாலைகள் கட்டுபவர்கள்
* சலவைத் தொழிலாளர்கள்
* தையல் கலைஞர்கள்
* மீன்பிடி வலை தயாரிப்பவர்கள்
* படகு கட்டுபவர்கள்
* கவசம் தயாரிப்பவர்கள்
* இரும்புக் கொல்லர்கள்
* சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள்
* பூட்டு செய்பவர்கள்

முதல் ஆண்டில் ஐந்து லட்சம் குடும்பங்கள் இதன்மூலம் பயன் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிஎம் – விஸ்வகர்மா’ தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும். மேலும், தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகையால் அன்றைய தினம் இந்தத் திட்டம் தொடங்கப்படலாம். முதல் ஆண்டில் ஐந்து லட்சம் குடும்பங்கள் இதன்மூலம் பயன் பெறும் என்றும், ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் எப்படி விண்ணப்பிப்பது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் திட்டத்திற்கான இணையதளமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry