கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், “பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள், பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தில் இணைந்தால் பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணையும் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்டப் பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீதம் வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?
இந்தத் திட்டத்தின் மூலம் குரு – சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணித் தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்.” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதற்கான நிகழ்ச்சி மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியிலுள்ள வேளாண் வணிக வளாகத்தில் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் எஸ்பிசிங். பாகேல் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry