ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை திக்குமுக்காட வைத்தார்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி இலங்கையில் தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம், மழை காரணமாக 3.40 மணிக்கு தொடங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா – பாதும் நிஸ்ஸங்காவின் பாட்னர்ஷிப்பை முதல் ஓவரிலேயே காலி செய்தார் பும்ரா. குசல் பெரேரா டக் அவுட்டானார். 2- வது ஓவரை வீசிய சிராஜ் ஒரு ரன்கள் கூட வழங்கவில்லை. அடுத்து 4ஆவது ஓவரில் தான் அந்த மேஜிக் நடந்தது. `W 0 W W 4 W’ என அந்த ஓவரில் சுனாமியாய் விக்கெட்டுகளை சாய்த்தார் சிராஜ்.
முதல் பந்து: பதும் நிஷாங்கா விக்கெட்.
2- வது பந்து: ரன்கள் ஏதுமில்லை.
3- வது பந்து: சதிரா சமரவிக்ரமா எல்பிடபிள்யூ.
4-வது பந்து: சரித் அசலங்கா இசன் கிஷனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
5-வது பந்து : நான்கு ரன்கள்
6-வது பந்து: தனஞ்செயா -டி – சில்வா விக்கெட் கீப்பரான ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதன் மூலம் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை விழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறார் முகமது சிராஜ். அதன் பிறகு தனது 3 -வது ஓவரில் ஷனங்காவை அவுட்டாக்கி தனது 5 விக்கெட்டையும், அதன்பின்னர் சிராஜ் மெண்டிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜ் பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன்பின்னர் சிராஜ் மெண்டிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்தியா அணி தரப்பில் முஹம்மது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பிளேயர் ஆஃப் த மேட்ச் விருதை சிராஜ் தட்டிச் சென்றார். இதன் மூலம் கிடைத்த ரூ.2.5 லட்சத்தை, மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுப்பதாக சிராஜ் அறிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?
இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் இஸான் கிஷன் களமிறங்கினர். இதில் கில் 27 ரன்களையும், கிஷன் 23 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா 8-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
ஆசிய கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை ஈட்டிய அணி என்ற வரலாற்று கரும்புள்ளியை பெற்றது இலங்கை. இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்க தேசம் 87 ரன்களில் சுருண்டது தான் குறைந்த ஸ்கோர் என இருந்தது. அதனை தற்போது இலங்கை முறியடித்துள்ளது.
இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவிலான தொடர்களில் கோப்பைகளை வெல்லவில்லை. கடைசியாக கடந்த 2018ல் ஆசிய கோப்பை தொடரில் வங்க தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2019ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை ஆகியவற்றில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. 2019ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடமும், 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடமும் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம், கோப்பை வறட்சிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீர்வு கண்டிருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry