டிஆர்பி ராஜா அமைச்சராக்கப்பட்டதால் டெல்டா திமுகவில் சலசலப்பு! பூண்டி கலைவாணன் அப்செட்! ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு!

0
68
பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. | அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

கடந்த சில வாரங்களாகவே, தி.மு.க அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் தி.மு.க-வினரை பரபரக்க செய்திருந்தன. இந்தச் சூழலில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

அப்போதே, டி.ஆர்.பி. ராஜா தான் புதிய அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என டெல்டா முழுவதும் பரவலாக பேசப்பட்டன. அதேபோல், டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்துறை இலாகாவும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் இதனைக் கொண்டாடி வரும் வேளையில், திருவாரூர் மாவட்டத்தில் கடும் விமர்சனங்களும் கிளம்பியிருக்கின்றன.

டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் பதவிக்கான ரேஸில் இருந்த பலர், ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர். குறிப்பாக பூண்டி கலைவாணன் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகி விட வேண்டும் என தீவிரமாக மெனக்கெட்டார். மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் டி.ஆர்.பாலு, ராஜாவை அமைச்சராக்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். அதற்காக அமைச்சரவையில் தற்போது நிலவும் சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Also Read : உதயசந்திரன் அச்சுறுத்துகிறார்; முதல்வர் கண்டுகொள்ளவில்லை! மாநிலக் கல்விக்கொள்கை குழுவிலிருந்து விலகுகிறேன்- ஜவஹர் நேசன்

மகன் அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னர், எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதற்காக டெல்டாவில் அமைச்சர் ரேஸில் இருக்கும் சீனியர்கள் சிலரை டி.ஆர்.பாலு சமாதானம் செய்ய் முயன்றதாக கூறப்படுகிறது. பூண்டி கலைவாணன் தரப்புக்கும், டி.ஆர்.பி.ராஜா தரப்புக்கும் ஆரம்பத்திலிருந்தே புகைச்சல்கள் தொடர்கின்றன. இந்த சூழலில் ராஜா அமைச்சராவதை தடுத்து, தான் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கலைவாணனின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக அறிவிக்கப்பட்ட பிறகு, திருவாரூர் திமுக எம்எல்ஏவான பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில் கட்சித் தலைமைக்கு எச்சரிக்கும் விடும் விதமாக, கழகத்திற்காக நாங்கள் இல்லை. எங்கள் கலைவாணனுக்காக மட்டுமே கழகத்தில் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று முறை தொடர்ந்து, எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, சட்டசபையில் சீனியர் என்பதால் அவருக்குத் தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இரண்டு முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, தொகுதியை விட்டுக் கொடுத்தவர் கலைவாணன். அவரை வேறு தொகுதியில் போட்டியிட தலைமை வலியுறுத்தியும், அதனை வேண்டாம் எனக் கூறி, `நான் தலைவர் கருணாநிதிக்கு வேலை செய்கிறேன்’ என அனைத்தையும் கவனித்து கொண்டார். அந்த வகையில் கலைவாணனும், சீனியர்தான் என அவர் தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் உதயநிதி திருவாரூர் வந்த போது, அவரை குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வலம் வந்து, தன் பலத்தை நிரூபித்தார் பூண்டி கலைவாணன். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் நேரடி தொடர்பில் இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். அதன்மூலம் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் டிஆர்பி ராஜா, பூண்டி கலைவாணன் தரப்பினருக்கும் இடையே விமர்சனம் தொடங்கியிருக்கின்றன. `உழைப்பவரை தேடிக் கண்டுபிடித்து கட்சி நடத்தினால் பலன் உண்டு. கிடைத்தவரை கொண்டு நடத்தினால் பலன் இல்லை’ என அண்ணா கூறியதையும், `உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம், மரியாதை அது கருணாநிதியுடன் முடிந்து விட்டது; தற்போது தலைமை சூழ்நிலை கைதியாக இருக்கிறது’ என்றும் லோக்கல் கட்சிக்குள்ளேயே டி,ஆர்.பி.ராஜாவுக்கு எதிரான குரல்கள் கிளம்பியிருக்கின்றன. சீனியர்கள் பலர் இருக்கையில் டி.ஆர்.பி.ராஜா-வுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது, டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry