கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து தீவிர போராட்டம் நடந்து வருகிறது. வளையமாதேவி கிராமத்தில் பரவனாறு மாற்று கால்வாய் வெட்டுகிறோம் என்கிற பெயரில், பசுமையான நெற் பயிர்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டன.
இதை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்து கேட்பதற்காக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கார் மூலம் இன்று நேரில் சென்றார். சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
வளையமாதேவி செல்ல பி.ஆர். பாண்டியனுக்கு அனுமதி மறுப்பு. சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார். தமிழ்நாட்டில் மனித உரிமை மீறப்படுவதாக பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு. @EPSTamilNadu @draramadoss #NLCProtest #NLCStopLandgrabing #NLCநிலம்_விவகாரம் pic.twitter.com/5p8p7qoT9J
— VELS MEDIA (@VelsMedia) July 30, 2023
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், 2வது கட்ட விரிவாக்க சுரங்கம் தோண்டுவதற்கு முன்னதாக உரிய வடிகால் கால்வாய் வெட்டப்படாமல் ஏற்கனவே வடிகாலாக பயன்பட்டு வந்த பரவனாறு முற்றிலும் அபகரிக்கப்பட்டு சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
Also Read : NLCக்கு எதிராகப் போராடிய அன்புமணி ராமதாஸ் கைது! போலீஸார் – பாமக தொண்டர்கள் இடையேயான மோதலால் பதற்றம்!
எந்த நேரமும் சுரங்க நீர் தேக்கப்பகுதி உடைப்பெடுக்கும் என்கிற மிரட்டலோடு சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் புதிய பாதையில் பரவனாறு வெட்டும் பணியை பயிர்களை அழித்துத் துவங்கியிருப்பது முற்றிலும் சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசன துறை, வேளாண்துறை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது. இது குறித்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. அவ்வாறு கால்வாய் வெட்டப்படாவிட்டால் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரழிவு ஏற்படும் என நிர்வாகத் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
கால்வாய் வெட்டப்படும் கரையோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் எங்கள் பகுதிக்கு என்எல்சி தேவை இல்லை; இப்படி வெட்டப்படும் கால்வாயால் ஒட்டுமொத்த நீர்வழி பாதைகளும் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கி வாழ முடியாத நிலை ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையை வைத்து விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்தி கால்வாய் தோன்டுவதற்கும், நிலங்களை கையகப்படுத்துவதற்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு சட்டவிரோதமாக துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பேரழிவு குறித்து உரிய ஆய்வுகள் நடத்தி நிரந்தரத் தீர்வு காணும் வரை, எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. உடனடியாக நிலக்கரி சுரங்கம் குறித்தும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்தும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பணி பாதிப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர் வேலை உத்திரவாதம் குறித்து ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் நீர்பாசனத்துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட அரசு துறையினுடைய செயலாளர்கள்;
நீரியல், மண்ணியல் மற்றும் சுற்றுச்சூழல், வல்லுநர்கள் உள்ளடக்கிய ஆய்வுக்குழுவை அவசரமாக அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து முழு ஆய்வு அறிக்கை பெற வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டி உரிய தீர்வு காண முன்வர வேண்டும். மேலும் விவசாய சங்க தலைவரான என்னை விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிய செல்வதற்கு கூட அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு முரணானது. மனித உரிமை மீறலாகும்.
எனவே என்எல்சி நிர்வாகம் செயல்படுவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கிற வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் என்எல்சி துவங்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுமையிலும் விவசாயிகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசின் விவசாய விரோத நடவடிக்கைக்கு எதிராக தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன்.” என்று கூறினார்.
முன்னதாக என்எல்சி நிர்வாக அலுவலகத்திற்கு முன்புறம், ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில சந்திக்க பி.ஆர். பாண்டியன் கிளம்பினார். அப்போது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், அமைதி ஏற்படுத்த உதவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, அமைதியை நிலைநாட்டும் விதமாக அங்கு செல்வதை பி.ஆர். பாண்டியன் தவிர்த்து விட்டார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry