உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!

0
122
GETTY IMAGE

எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபடுவோம். அதேநேரம் எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குல தெய்வத்தைத்தான். சிலர் அவரவருக்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவார்கள். அதனை இஷ்ட தெய்வ வழிபாடு என்பார்கள்.

தெய்வ வழிபாட்டை ஐந்து வகையாக பிரித்து கொள்ளலாம். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கரண நாத வழிபாடு, லக்னத்திற்கு ஏற்ற தெய்வ வழிபாடு, தசா புத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடு என ஐந்து வகையுள்ளது. இந்த வாரம் உங்கள் லக்னங்களுக்கு ஏற்ற லக்கி கடவுள் வழிபாடு என்ன என்பதை கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷ லக்னம் : மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் முருகன், சூரியன், சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் சிகப்பு நிற உடை அணிந்து திருச்செந்தூர் முருகனை தரிசிப்பது சிறப்பான பலன்களை தரும். திருச்செந்தூர் முருகனை தரிசிக்க முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு நிற உடை அணிந்து வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதும், தைபூசம், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் கடைப்பிடிப்பதும் சிறந்தது. சூரிய நமஸ்காரம் செய்வதும், சிவ பெருமானை வழிபடுவதும் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றத்தைத் தரும்.

ரிஷப லக்னம் : ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவி, லட்சுமி நாராயணர், திருப்பதி வெங்கடாசலபதி, திருச்சானூர் பத்மாவதி தாயார், சாந்த சொரூப அம்மன்களை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது கைமேல் பலன் தரும்.

Also Read : இந்த வார ராசி பலன்! இந்த ராசிக்காரர்கள் மாமியாரை அனுசரித்துப் போங்க! சொத்து வாங்கும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

மிதுன லக்னம் : மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் பெருமாளை வழிபடுவது சிறப்பு, திருப்பதி வெங்கடாசலபதி, லட்சுமி குபேரரை வழிபடுவது நலம். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது சிறப்பு.

கடக லக்னம் : கடக லக்னத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவி மற்றும் சாந்த சொரூப அம்மன்களை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது உத்தமம்.

சிம்ம லக்னம் : சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபடுவதும், பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதும் அற்புதமான பலன்களை தரும். பிரதோஷ நாட்களில் சிவனை வழிபடுவதும், சூரிய பகவானை வணங்குவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வதும் கைமேல் பலன்களைத் தரும்.

கன்னி லக்னம் : கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மர், திருப்பதி வெங்கடாசலபதி, லட்சுமி குபேரரை வழிபடுவது சிறப்பு. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது மேலும் சிறப்பு.

துலாம் லக்னம் : துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வழிபடுவது சிறப்பு. வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது உத்தமம்.

விருச்சிக லக்னம் : விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி, காவல் தெய்வங்கள் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை வணங்குவதும், செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கையை விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது கைமேல் பலனைத் தரும்.

தனுசு, மீனம் லக்னம் : தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்தி மற்றும் சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது சிறப்பு.

மகரம், கும்பம் லக்னம் : மகரம், கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுவதும், ஆஞ்சநேயரை வழிபடுவதும் சிறப்பான பலன்களை தரும். சனிக் கிழமைகளில் வரும் சனிப் பிரதோஷ நாளில் சிவ பெருமானை தரிசிப்பது சிறப்பு. குறிப்பாக சனிக்கிழமைகளில் நீல நிற ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்வது உத்தமம்.

‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை.
தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry