மத்திய அரசு புதிதாக 4 ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை, அக்னிபத் என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு ராணுவ பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்த விதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது போல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப்படையிலும் இவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
4 ஆண்டுகள் பணி முடிப்போரை காவல்துறையில் பணியமர்த்த சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. அதுமட்டுமின்றி, சுயதொழில் செய்ய விரும்பினால், அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இவ்வளவு பயன்கள் இருந்தாலும், ராணுவத்தில் சேர தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள், சில கட்சிகளின் தூண்டுதலால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ராஜஸ்தான், பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் புகுந்து 100-க்கும் அதிகமான இளைஞர்கள் இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டவாறு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து அவர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் ஜன்ஜதாப்தி ரயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த வழியாக வந்த ரயில் மீது கற்களை வீசித்தாக்கினர்.
முஸாபர்பூரில் ராணுவ உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலையில் டயர்களை போட்டு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள சக்கர் மைதானத்தில் ராணுவ உடற்தகுதி தேர்வுக்காக வந்திருந்தனர். அக்னிபத் திட்டம் குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, “இரண்டு ஆண்டுகள் கழித்துதான் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் ராணுவத்திற்கு வேலைக்கு எடுப்பவர்களில் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக பணியில் வைத்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். எஞ்சியவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லாமல் ஓய்வூதியமும் இல்லாமல் எதிர்காலம் என்னாவது?” என்று கேள்வி எழுப்பினர்.
ராஜஸ்தானிலும், ஜெய்ப்பூரில் டெல்லி – அஜ்மீர் நெடுஞ்சாலையில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய அரசின் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரயிலை தீவைத்து கொளுத்தினர். உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளையும் அவர்கள் மறித்துள்ளனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry