ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கெடு! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி!

0
133

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக(BDO) ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி, அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், தனது உதவியாளர் மூலம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்றொரு அரசு அலுவலரைச் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ராஜேந்திரன், பிடிஓ

இதன்பேரில் அமைச்சர் இல்லத்திற்கு பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அன்பு கண்ணன் ஆகியோர் மறுநாள் சென்றுள்ளார். அப்போது பிடிஓ ராஜேந்திரனை அவர் சாதி குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத பிடிஓ ராஜேந்திரன், கண்கலங்கியபடி அமைச்சர் முன்பு நின்றார். ஆனாலும் தொடர்ந்து ராஜேந்திரனின் சாதிப் பெயரை இழிவாகச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் பணியிட மாற்றம் செய்வதாகவும் மிரட்டி இருக்கிறார்.

இதையடுத்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து பட்டியலின பிடிஓவை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry