புதுச்சேரி மக்களிடம் அமித் ஷா சபதம்! கறுப்புக் கொடி போராட்டத்தை புறக்கணித்த திமுக!

0
184

அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு சென்றிருந்த அமித் ஷா, காலையில் பாரதியார் நினைவு இல்லத்திற்கும், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றிருந்தார். அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என தெரிவித்தார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ அரவிந்தரை இளைஞர்கள்  பின்பற்ற  வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.

மதிய உணவுக்குப் பின் ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அமித் ஷா, அதன்பிறகு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். அவ்விழாவில் கிழக்கு கடற்கரை சாலையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், குமரகுருபள்ளத்தில் 45 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள், 30 கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் புதுச்சேரி காவல் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டோருக்குப் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய அமித் ஷா, ” பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது சொன்னது போல புதுச்சேரியை பெஸ்ட் (BEST – Business, Education, Spiritual and Tourism hub) புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். பெஸ்ட் புதுச்சேரி ஆக்கிவிட்டுத்தான் மறுமுறை மக்களை சந்திக்க வருவோம். ரூ.6 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றவும் முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இணைந்து கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry