தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ‘கொங்கு நாடு’ பிரிக்க முடியுமா? என்ன சொல்கிறது அரசமைப்புச் சட்டம்!

0
406

தமிழ்நாட்டைப் பிரித்து, கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியமா என்பதை பார்க்கலாம்.

திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு மத்திய அரசை,  ஒன்றிய அரசுஎன்றே திமுகவினர் கூறி வருகின்றனர். ஊடகங்களும் ஒன்றிய அரசு எனப் பயன்படுத்த வேண்டும் என அதிகார மட்டத்தால் உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாமல் உச்சமாக, சட்டப்பேரவையில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி திமுக எம்.எல்..வுமான ஈஸ்வரன், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் முழக்கம் இடம்பெறாததை சுட்டிக்காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜெய்ஹிந்த் என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று, திமுக சீனியர் நிர்வாகியும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும் கூறியிருந்தார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு என கூறுவது, ஜெய்ஹிந்த் முழக்கத்தை தவிர்ப்பது போன்றவை எல்லாம், மீண்டும் திராவிடநாடு பிரிவினையை நோக்கி திமுக நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு விவகாரத்தையும் முன்வைத்து, திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கவும் அவர்கள் தவறுவதில்லை.

திமுகவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதை உணர்த்தும் வகையில், மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகன் பற்றிய சுயகுறிப்பில், அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என மத்திய அரசு குறிப்பிட்டது. அடுத்த கட்டமாக, திமுகவுக்கு பதிலடி தரும் விதமாகவும், அக்கட்சியை பலவீனப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் இருந்து கொங்கு மண்டலத்தை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை மனதில் கொண்டே, சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தை மோடி ராஜினாமா செய்யச் சொன்னதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.    

தமிழ்நாடு ஆளுநராகவோ அல்லவது கொங்கு நாடு யூனியன் பிரதேச ஆளுநராகவோ ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம். கொங்கு நாட்டைப் பிரிக்க தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றே சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படியென்றால், அரசமைப்பு சட்டப்பிரிவு 3-ன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றி அதை சட்டமாக்கினால், மாநிலத்தை பிரிக்க முடியும். ஆனால், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில்தான் மாநிலப் பிரிப்பு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் கருத்தை மட்டுமே அவர் கேட்க வேண்டும், ஒப்புதலை அல்ல. எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவை ஒப்புதல் தராவிட்டாலும், மத்திய அரசு மாநிலத்தை பிரிக்க முடியும்.   

இதன் அடிப்படையில்தான், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதே சூத்திரத்தைத்தான் தமிழ்நாடு விவகாரத்திலும் கையாள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதை கோடிட்டுக் காட்டும் விதமாகவே, எல். முருகன் பற்றிய சுய குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டது. தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசனும், மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணாமலையும் கொங்கு நாட்டை சேர்ந்தவர்களே.

கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்கள் உள்ளன. இங்கு 10 மக்களவை தொகுதிகளும், 61 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன. புதுச்சேரி போன்று இந்த மண்டலத்தை கொங்கு நாடு யூனியன் பிரதேசம் என அறிவிப்பதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது. மாநிலப் பிரிப்பு என்பது தற்போது எழுப்பப்படும் புதிய முழக்கம் கிடையாது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறவில்லை என்பதால், திருச்சியை மையமாக வைத்து தனி மாநிலம் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலகாலமாக இருந்து வருகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டை 3 ஆக பிரிக்கலாம் என கூறி இருந்தார். மத்திய அரசின் அடுத்தகட்ட நகர்வை வைத்து, மாநிலப் பிரிப்பு உடனடியாக உண்டா? இல்லையா? என்பதை தெளிவாகக் கணித்துவிடலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry