சீனாவின் உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சில வாரங்களுக்கு முன்பு சீனாவிடம் இலங்கை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் சீனாவின் கடும் அழுத்தம் காரணமாக இந்த கப்பலுக்கு சனிக்கிழமையன்று இலங்கை அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கை கடற்பரப்பில் இருக்கும் போது, அதன் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், யுவான் வாங் 5 கப்பலை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதித்துள்ளது. அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 16 மற்றும் 22க்கு இடையில், எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக மட்டுமே கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனாவிலிருந்து யுவான் வாங் 5 ஆய்வு கப்பல், இன்று காலை 8.30 மணியளவில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்ததாக, துறைமுக கேப்டன் நிர்மல் டி சில்வா தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் இந்த சீன கப்பலுக்கு இருக்கிறது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் நிர்வகிக்கப்படுகிறது. 11,000 மெட்ரிக் டன் எடையை சுமக்கும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது. யுவான் வாங்-5 கப்பல் 222 மீட்டர் நிளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பலுக்கு 750 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் திறன் உள்ளது. அம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு 150 கிலோ மீட்டரில்தான் உள்ளது. எனவே கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இந்த கப்பல் கண்காணிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்தியா தனது ஏவுகணைகளை சோதித்து வரும் நிலையில், இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டால் அவற்றைக் கண்காணிக்கும் சென்சார்கள் யுவாங் வாங் 5 என்ற கப்பலில் உள்ளன. இந்திய ஏவுகணைகளின் வீச்சு மற்றும் துல்லியத்தை அளவிடும் திறன் இந்த கப்பலுக்கு இருக்கிறது. இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளை எளிதாக்கும் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

2014ஆம் ஆண்டு, அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை, அதன் துறைமுகம் ஒன்றில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கியது. இதனால், இந்தியா-இலங்கை உறவுகள் நெருக்கடிக்கு உள்ளாகின. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், 99 வருடங்களுக்கு, 1.12 பில்லியன் டாலருக்கு, சீனா மெர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை குத்தகைக்கு விட்டது. இந்தத் துறைமுகம் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற அச்சம் இந்தியாவிற்கு இருக்கிறது.
Also Read : ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!
சீனா இலங்கைக்கு அதிகளவில் கடனும் வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமான கடனை சீனா வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், சீர்குலைந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கையின் அத்தியாவசிய உயிர்நாடியாக இந்தியா இருந்து வருகிறது.
சீன உளவுக் கப்பல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் எந்தவொரு விவகாரத்தையும் மத்திய அரசு கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry