தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “75ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத விழாவில், மத்திய அரசுக்கு இணையான மூன்று விழுக்காடு அகவிலைப்படியினை 2022 சூலை முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் அகவிலைப்படி வழங்குவதே தேவையில்லாதது போல் பேட்டி அளித்து வந்தார். ஆனால் முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். என்னதான் மத்திய அரசை நாம் பல்வேறு செயல்பாடுகளில் விமர்சனம் செய்து வந்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியினை முறையாக நிலுவைத் தொகையுடன் வழங்கி வருகிறார்கள் என்பதை நினைத்துப் பாராட்டாமல் இருக்க முடியாது.
Also Read : மாணவர்களுக்கு வீட்டுப்பாடம்! பள்ளி அங்கீகாரம் ரத்தாகும் என கல்வித்துறை எச்சரிக்கை!
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி காலத்திலும் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியினை நிலுவைத் தொகையுடன் அவ்வப்போது வழங்கி வந்தார்கள் என்பதையும் இந்நாளில் எண்ணி பெருமையுருகிறோம்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிற மத்திய அரசு ஊழியர்கள், இந்திய ஆட்சிப் பணியாளர்கள் (IAS), இந்திய காவல் பணி பணியாளர்களுக்கு (IPS), அகவிலைப்படியினை மத்திய அரசு அறிவிக்கிற போதெல்லாம், அவர்கள் நிலுவைத் தொகையுடன் பெற்று வருகிறார்கள் என்பதை சொல்லாமல் இருக்க முடியுமா? விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றார் போல் அகவிலைப்படியினை வழங்குவதை எல்லாம் நிதிச்சுமை எனக் காரணம் காட்டுவது எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்?
Also Read : தேசியக் கல்விக் கொள்கை புரட்சிகர முன்னெடுப்பு! காலனியாதிக்க கல்வி முறை வேண்டாம் என ஆளுநர் கருத்து!
சுதந்திர தின அமுதப் பெருவிழா அறிவிப்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய அறிவிப்பாக மணம் கமழ்ந்திருக்கும். அது போல் நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படியினை அறிவித்திருந்தாலும் வரவேற்க வேண்டிய அறிவிப்பாக அமைந்திருக்கும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலனை செய்து அகவிலைப்படி நிலுவைத் தொகையினை அறிவிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் இதயங்களின் உரிமைக் குரலாக பதிவு செய்கிறோம்”. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry