2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி, அடுத்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? என்பதுதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம் இருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசும் போது, கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார். அப்போது தோனிக்கு அருகில் இருந்த நபர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறி தவறை திருத்தினார்.
அதற்கு தோனி, ஆம் என்று கூற, சிஎஸ்கே ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். அதன்பின் தோனியின் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் குணமடையவில்லை. மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைவேன் என்று கூறியிருக்கிறார்கள் என தோனி கூறினார்.
கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், ரசிகர்களின் பேரன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். தோனி கட்டாயம் அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி குறித்தும், சஞ்சய் பங்கர் பகிர்ந்த விவகாரம் குறித்தும் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மிகமுக்கியமான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடையும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.
ஒவ்வொரு போட்டிக்கும் எனக்கான திட்டங்களை தயாராக வைத்தே களமிறங்குவேன். அதேபோல் அன்றைய ஆட்டம் இந்திய அணிக்காக எனக்கு கடைசி போட்டியாக அமைந்தது. என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன். அறிவிப்பு வேண்டுமானால் ஒரு ஆண்டுக்கு பின் வந்திருக்கலாம். ஆனால் அன்றைய தினமே ஓய்வுபெற்றுவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.
பயிற்சியாளர்களிடம் இருந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்காக சில தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். நான் ஒவ்வொரு முறை பயிற்சியாளரை பார்க்கும் போது, அந்த தொழில்நுட்ப சாதனங்களை திருப்பி கொடுத்தேன். ஆனால் அதனை பயிற்சியாளர் பெற மறுத்தார். அவரிடம் இதற்கு மேல் இது எனக்கு தேவையில்லை என்று எப்படி அவரிடம் கூற வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் உடனடியாக நான் ஓய்வை அறிவிக்கவில்லை.” என்றார். அண்மை காலமாக விளம்பர படங்களில் நடிப்பதற்காக சென்னை, பெங்களூர் என்று அடுத்தடுத்த நகரங்களுக்கு தோனி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry