குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு! தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

0
57

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது. அரசுப் பள்ளி மாணவமாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர்பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என கூறினார்.

இருப்பாளி என்ற இடத்தில் பேசிய அவர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு பொங்கல் பரிசானது ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பிரச்சாரத்தின் இடையே ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளை அவர் திறந்துவைத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry