மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “நாம் நம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளிவைத்திருந்தோம். அவர்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை. இது 2000 ஆண்டுகள் தொடர்ந்தது.
ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகள் 2000 ஆண்டுகளாக அடக்குமுறையை அனுபவித்தபோது அப்படியான பாகுபாட்டை அனுபவிக்காதவர்கள் ஏன் வெறும் 200 ஆண்டுகளுக்கு சில தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது? அந்தவகையில், அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியமானதுதான்.
நாம் அவர்களுக்கு சமத்துவத்தை நல்கும்வரை சில சிறப்புத் தீர்வுகள் தேவைப்படுகின்றன. அத்தகைய ஒரு தீர்வுதான் இட ஒதுக்கீடு. எனவே இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பாகுபாடுகள் நிலவும்வரை தொடர வேண்டும், ஆர்.எஸ்.எஸ். அதற்கு முழு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கும்.
எனவே, பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம். மேலும், இட ஒதுக்கீடு என்பது வெறுமனே பொருளாதார அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதிசெய்வது மட்டுமல்ல, மரியாதை அளிப்பதும் கூட.” இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Nagpur, Maharashtra: On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system…We did not care for them, and this continued for almost 2,000 years…Until we provide them equality, some special remedies have to be… pic.twitter.com/kBxrlAYAgV
— ANI (@ANI) September 6, 2023
நிகழ்சியில் மாணவர் ஒருவர் அகண்ட பாரதம் பற்றி கேள்வி எழுப்பியபோது, “இப்போதுள்ள இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது அகண்ட பாரதம் சாத்தியமாகும். 1947-ல் இந்தியாவில் இருந்து பிரிந்தவர்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்றார்.
மேலும், 1950 முதல் 2002 வரை ஏன் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை” என்று மாணவர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த மோகன் பகவத், “ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் நாங்கள் எங்கிருந்தாலும் தேசியக்கொடியை ஏற்றுவோம். நாக்பூரிலுள்ள மஹால், ரெஷிம்பாக் ஆகிய இரு வளாகங்களிலும் கொடியேற்றப்படுகிறது. எனவே, மக்கள் இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது” என்று பதிலளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை முன்னெடுத்துவரும் சூழலில், இட ஒதுக்கீடு குறித்த மோகன் பாகவத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry