ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
இந்திய சாலைபோக்குவரத்து துறையில், திறமையான ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சாலை விதிமுறைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணமாகவும், சாலை விபத்துக்கள் அதிகளவில் நிகழ்கின்றன. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு மோட்டார் வாகன திருத்தம் சட்டம் 2019 அதிகாரம் அளிக்கிறது.
இதன் அடிப்படையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை.
இதற்காக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன்படி, டிரைவிங் பழக வரும் நபர்களுக்கு, அதிக தரமான பயிற்சியை வழங்க, இந்த மையங்கள் ‘சிமுலேட்டர்’- வாகனம் போன்ற வடிவமைப்பு, டிரைவிங் பழகுவதற்கான பிரத்யேக பாதை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டம், 1988-ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்க படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும். இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே அந்த ஓட்டுநருக்கு உரிமம் கிடைத்துவிடும். இந்த ஓட்டுநர் மையங்கள், தொழில்ரீதியான சிறப்பு பயிற்சியை அளிக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry