இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலர்களில் இல்லாமல், ரூபிள் – ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர், 110 டாலர் என விலை உயர்ந்தது. முன்பேர வர்த்தகத்தில் 120 டாலர், 130 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு, தற்போது 40% வரை விலை அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதையடுத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க ஐரோப்பிய நாடுகளும் மறுத்துள்ள நிலையில், பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்க தயார் என சீனா அறிவித்தது.
இந்நிலையில், ஏற்றுமதியை உயர்த்துவதற்காகவும், இந்தியாவைக் கவர்ந்திழுக்கவும், போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில், முதல் தரமான உரல்ஸ் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பான ஒப்பந்தத்தின்படி, போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில், முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.
பணப் பரிவர்த்தனையை பொறுத்தமட்டில், கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் இல்லாமல், ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்ய இருநாடுகளும் சம்மதித்துள்ளன. அதாவது வர்த்தகத்தின்போது இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படும். ரஷ்யாவின் மெசேஜிங் சிஸ்டம் மூலம் ரூபாய்- ரூபிள் மதிப்பில் பரிவர்த்தனை நடைபெறும்.
ஹெட்லைன் ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை அப்போதிருந்து சுமார் 10 டாலர்கள் உயர்ந்துள்ளன. எனவே இப்போதைய சந்தை விலையை ஒப்பிட்டால், மொத்தமாக 40 டாலர்கள் மதிப்பில், குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்கக்கூடும். இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. இதன் மூலம் ஆசியாவின் நம்பர் 2 கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா பெருமளவு பயனடைய வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற் கச்சா எண்ணெய் விலை உயர்வதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவால், பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும், பிரதமர் மோடியின் நகர்வு மிகவும் நுட்பமானது எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry