அசர வைக்கும் டெல்லி அரசுப் பள்ளிகள்! நவீன வசதிகளுடன் புதிய கற்பித்தல் முறை! தமிழகத்திலும் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு!

0
332

டெல்லியில் நவீன வசதிகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளியைப் போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்குச் சென்றுள்ள மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரை நேற்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

பின்னர் டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை, கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவரை வரவேற்கும் விதமாகத் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்கள் மலர் கொடுத்து அவரை வரவேற்றனர்.

நீச்சல் குளம் உள்பட நவீன வசதியுடன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ள ராஜ்கியா சர்வோதயா பால வித்யாலயா பள்ளியை ஸ்டாலின் பார்வையிட்டார். தரமான கல்வி, சுகாதார வசதி என அனைத்திலும் இந்தப் பள்ளி சிறந்து விளங்குகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மு.க. ஸ்டாலினிடம் டெல்லி கல்வி இயக்குனர் ஹிமான்ஷூ குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது? ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது? என்பது குறித்து கெஜ்ரிவால் விளக்கி கூறினார்.  அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை எடுக்கப்படும் மகிழ்ச்சி வகுப்புகள், அதாவது புத்தகமில்லா வகுப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இதுபோன்ற பள்ளியை தமிழகத்தில் அமைப்பது குறித்து கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். டெல்லி அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள் வெளிநாடுகளில் பயிற்சிக்கு அனுப்பப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கு இந்திய மேலாண்மை நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் கூறினார். அதேபோல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அமெரிக்க தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  மகிழ்ச்சியான பாடத்திட்டம், தேசபக்தி பாடத்திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம், வணிகத்தில் சாதனை படைத்தவர்கள் குறித்தான பாடத்திட்டங்கள் குறித்தும் கெஜ்ரிவால் விளக்கினார்.

குழந்தைகளை மனப்பாடம் செய்யும் கற்றல் முறையில் இருந்து கவனத்துடன் புதிய கற்றல் முறைக்கு டெல்லி மாநில கல்வித்துறை நகர்த்தி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மு.க. ஸ்டாலினிடம் கூறினார். மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுவது குறித்தும் தமிழக முதலமைச்சரிடம் விவரிக்கப்பட்டது.

Also Watch : ஹிந்தி எதிர்ப்பு : திராவிடக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு | நவோதயா பள்ளிகள்

இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மோஹல்லா கிளினிக்கையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள வசிதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியில் இருக்கும் மாதிரிப் பள்ளியைப் போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும். அப்படி தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்பட்ட பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களின் சார்பில் வரவேற்கவிருக்கிறோம்” என்றார்.

தமிழக முதலமைச்சருடனான தனது சந்திப்புகள் தொடர்பான டிவிட்டர் பதிவு ஒன்றில், கல்வி மட்டுமே சிறந்த சமுதாயத்தையும், சக்தி வாய்ந்த நாட்டையும் உருவாக்க உதவும். நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்துவோம்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகளின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry