லீவு கிடையாது, ஒன்னுக்கு கூட போக முடியாது! ஊழியர்களை கசக்கிப் பிழியும் சாம்சங் நிறுவனம்! துணைபோகும் தமிழக அரசு! நீடிக்கும் போராட்டம்!

0
50
The workers are protesting since September 9 over hike in wages, union recognition and working time of 8 hours at the plant, which accounts for a fifth of Samsung’s 2022-23 India annual revenue of $12 billion. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு 9 நொடிகளுக்கும் ஒரு ஃபிரிட்ஜ் என ஒருநாளைக்கு 10,000 ஃபிரிட்ஜ்கள், 5,000 வாஷிங் மெஷின்கள் தயாரிக்கப்பட்டு இங்கிருந்து 7 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக அளவில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலைகளில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் இந்த சாம்சங் தொழிற்சாலைதான்.

ஆண்டுக்குப் பல மில்லியன் வருமானம் ஈட்டிவரும் இந்தத் தொழிற்சாலை, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் மிகக் குறைவான ஊதியம் வழங்கி, அதிக நேரம் வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை செய்கிறார்கள் என்பதுதான் இங்கு பெரும் போராட்டம் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.

இப்போராட்டத்தின் ஒரே நோக்கம், தங்களது பிரச்னைக்கானத் தீர்வு, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் தங்களுக்கானத் தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதுதான் என்கிறார்கள் அங்குப் போராடும் தொழிலாளர்கள். தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து அங்கீகரிக்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அவர்கள உறுதியுடன் கூறுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் துணைநிற்கிறது ‘சிஐடியு’ தொழிற்சங்கம்.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்கள் யூனிஃபார்முடன் தினமும் வேலைக்குச் செல்வதுபோலவே, காலையில் வந்து போராட்டம் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்புகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், விருப்பமுள்ள தனிநபர்களும் சேர்ந்து, போராடும் தொழிலாளர்களுக்கான குடிநீர் மற்றும் உணவிற்கானச் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். தங்களது பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையைக் கைவிட்டுவிடாமல் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் போராடுகின்றனர்.

அதிக நேரம் வேலை, தோள்பட்டைஎலும்புத் தேய்மானம், குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லக்கூட விடுமுறை கொடுப்பதில்லை,10 ஆண்டுகளைத் தாண்டியும் 25,000 ரூபாயைத் தாண்டாத சம்பளம், மாடு மாதிரி மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள். கேள்வி கேட்டால் தனி அறையில் ஒருநாள் முழுவதும் உட்கார வைத்து உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள்’ என்கின்றனர் தொழிலாளர்கள்.

சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கச் சொன்னால்; ’A,B,C,D,E’ என கிரேடு முறையைக் கொண்டுவருகிறார்கள். அதன்படி நல்ல கிரேடு எடுப்பவர்களுக்கு ரூ.200, ரூ.300, ரூ.500 என கூடுதலாகத் தருகிறார்கள். அடுத்த மாதம் கிரேடு குறைந்துவிட்டால் அதுவும் கிடைக்காது. இந்த கிரேட் வகுப்பதற்கும் முறையான விதிமுறைகள் ஏதுமில்லை. ஒருநாள் விடுமுறை எடுத்தாலும், வேலைநேரத்தில் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டாலும் இந்த கிரேடுகள் குறைக்கப்படும் என தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

விடுமுறை எடுக்க மேனஜரிடம் போராட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு வழங்கப்படும் விடுமுறையையும் எடுக்க விடுவதில்லை. அம்மா, குழந்தைகள், மனைவி என யாருக்கு மருத்துவ அவசரம் என்றாலும் ‘வேறு யாரைவது அனுப்பி வையுங்க, நீங்க ஆபீஸ் வந்துருங்க..’ என்று மனசாட்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். சிறுநீர் கழிக்கக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார்கள். யாருக்கு என்ன நடந்தாலும் உற்பத்தி கொஞ்சம்கூடக் குறையக் கூடாது என்று லாப வெறியுடன் வேலை வாங்குகிறார்கள்.” என்கிறார்கள் வேதனையுடன்.

Also Read : ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? சிறுமி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்! காவல்துறைக்கே தலைகுனிவு!

இந்த நிறுவனத்திற்காக மில்லியன்களில் லாபம் ஈட்டித்தரும் எங்களுக்கு ஒருநாள் கூட முழுமையான விடுமுறை கிடைக்காமல், சரியான சம்பளமுமில்லாமல் மாடு மாதிரி நடத்தப்படுகிறோம். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஒருநாள் முழுவதும் தனி அறையில் எங்களை கட்டாயப்படுத்தி உட்காரவைத்து, கேவலமாகத் திட்டி உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று குமுறுகின்றனர் தொழிலாளர்கள்.

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் 25 நாள்களைத் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்பேச்சுவார்த்தைகளில் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தரப்பு, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. தொழிற்சங்கம் அமைந்துவிட்டால் தொழிலாளர்கள் உரிமைக் குரல்களை அடக்க முடியாது என்று தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்கிறார்கள் போராடும் தொழிலாளர்கள்.

அரசும் தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஒலிக்காமல், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முதலாளித்துவத்தின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டையும் தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வரும் அரசு, அந்நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பிரச்னை என்றால் கண்டுகொள்ளாமல் கள்ளமெளனம் சாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது என்று குமுறுகிறார்கள்.

Also Read : வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?

தொழிற்சங்கம் அமைப்பது என்பது இந்திய அரசியல் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அந்த அடிப்படையான நம் நாட்டின் சட்டத்தைக்கூட தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. சாம்சங் நிறுவனமும் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.

எங்களின் தொழிற்சங்கத்தையும், கோரிக்கைகளையும் ஏற்காமல் பணி நீக்கம் செய்வேன், சம்பளத்தை நிறுத்தி வைப்பேன், இடமாற்றம் செய்வேன், குடும்பங்களை மிரட்டுவேன், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கிறார்கள் அவதூறு பரப்புவேன் என சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை மிரட்டி வருகிறது. இவையெல்லாம் நம் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்நாடு அரசு ‘போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று சாம்சங்கின் குரலாகப் பேசுகிறது என்கிறார் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்’ தலைவர் முத்துக்குமார்.

சிஐடியு தொழிற்சங்கங்கள் எங்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கின்றன. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். சிபிஐ (எம்), சிபிஐ (எம்.எல்) போன்ற இடதுசாரிக் கட்சிகள் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தை நடத்தியுள்ளன. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தி் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கொரியாவில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தினர் தமிழ்நாடு அரசிற்கு ஓட்டுப்போடவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் ஓட்டுப் போட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து சாம்சங் நிறுவனத்தின் பக்கம் நிற்காமல், தொழிலாளர்கள் பக்கம் தமிழ்நாடு அரசு நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறார் முத்துக்குமார்.

இந்தியாவில் மட்டுமே அடிமட்ட சம்பளத்தில் நல்ல திறமையான தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். ஊதியத்தைப் பொறுத்தவரை கொரியாவில் இருக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இங்கு அவ்வளவு ஊதியம் தரவில்லை என்றாலும், இந்த நாட்டின் பொருளாதார சூழலுக்கேற்ப உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சர்வதேச சந்தையில் ஒரே விலையில்தான் விற்கப்படுகிறது. வரிக் கட்டணம் மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே சர்வதேச அளவில் ஒரே விலையில் விற்கப்படும். ஆனால், தொழிலாளர்கள் சம்பளம் மட்டும் ஒரே மாதிரி இருக்காது. நம் சென்னையில் உற்பத்தியாகும் சாம்சங் பொருட்களின் உற்பத்தியும், அதன் உழைப்பிற்கான செலவுகளும் மிகக்குறைவு. அதனால் சாம்சங் இங்குக் குறைந்த விலையில் தனது பொருட்களை விற்பனை செய்யுமா? இதுதான் முதலாளித்துவத்தின் கொடூரமான வணிகத் தந்திரம். தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குவதே நியாயமாக இருக்கும் என்கிறார் அவர்.

‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்’ தலைவர் முத்துக்குமார்.

தெற்கு இரயில்வே ஓய்வூதிய யூனியனின் தலைவர் இளங்கோ கூறும்போது, ‘சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாடு அரசு சாம்சங் நிறுவனத்திற்குத் துணைபோய் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், சாம்சங் நிறுவன வழக்கறிஞம் ஒரே மாதிரியாக, சாம்சங் தொழிலாளர்கள் அமைக்கும் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ பெயரில், ‘சாம்சங்’ என்ற பெயர் இடம்பெறக் கூடாது என்று கூறுகிறார்கள்.

அந்தப் பெயரை நீக்கினால் சங்கத்தைப் பதிவு செய்வோம் என்கிறார்கள். இவர்கள் கூறுவது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்தின் பெயரில் வைக்க எந்தத் தடையும் சட்டத்தில் இல்லை. கொரியாவில் இருக்கும் சாம்சங் தொழிற்சங்கத்தின் பெயர், ‘நேஷனல் சாம்சங் எலெக்ட்ரானிக் யூனியன்’. அங்கு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இங்கு மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

Also Read : 2025-ல் யாருக்கு ஏற்றம்..? யாருக்கு ஏமாற்றம்..? ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்!

தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை ஏற்க மறுப்பது மட்டுமின்றி, எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை நடத்துகிறது. பல்வேறு இடையூறுகளைக் கொடுக்கிறது. தொழிலாளர்கள் விரோதப் போக்கிற்கும் தீர்வு கண்டே ஆக வேண்டும் எனப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்கள். தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று அழுத்தமாகப் பேசினார்.

வெளிநாடுகளில் இருந்து பெருநிறுவனங்களை அழைத்துவரும் அரசு, நாட்டின் சட்டத்தையும் அந்நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இனியும் திறமை வாய்ந்த இளம் இந்திய தொழிலாளர்களுக்கு அடிமட்ட ஊதியம் வழங்குவதை அனுமதிக்கக் கூடாது. அடிமட்ட சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் நாடாக இந்தியா இருக்கக் கூடாது. உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry