சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு! போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை!

0
75

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னிதி அமைந்திருக்கும் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபையில் பக்தர்கள் ஏறிச் சென்று நடராஜரை வழிபடுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கீழிருந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சிற்றம்பல மேடையில் ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. கனகசபை மேல் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் நகரில் கோயிலுக்கு எதிராகப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் எதுவும் ஒரு மாத காலத்திற்கு நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சினைகள் காரணமாக அரசின் அடுத்த கட்ட முடிவு குறித்து சட்ட வல்லுனர்களால் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில், நடராஜர் கோயில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள், மற்றும் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கனகசபையில் ஏறி தேவாரம் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம், தெய்வத் தமிழ்ப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த காலங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தின. இன்னும் சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

கனகசபையில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது(BEAM). இது 64 ஆயகலைகளை குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &