ஆசிரியர்கள் முதல் அதிகாரிகள் வரை கடுமையான மன அழுத்தம்! உயிர் பலியும் ஏற்படுவதால் கல்வித்துறையில் கலக்கம்!

0
2467

எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. எண்ணும் எழுத்து பயிற்சி ஒன்றும் இராணுவப் பயிற்சி அல்ல. இந்தப் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் ஆசிரியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது கொடுங்குற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

வா. அண்ணாமலை

அந்த அமைப்பின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியம், வாலம்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, இடைநிலை ஆசிரியை ஆர்.லதா(53), ‘நான் மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்’, எனவே தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகத்தில் பயிற்சியில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

எந்த நோயாக இருந்தாலும் பயிற்சி வகுப்பில் பட்டியலில் பெயர் இருந்தால் நீங்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கடந்த 6,7-ந் தேதிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள். இதனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியை லதா கடந்த 7-ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரவு 11.00 மணியளவில் மரணமடைந்துவிட்டார்.

உயிரிழந்த ஆசிரியை லதா

சிகிச்சைக்குக் கூட அனுமதிக்காத அதிகாரிகளின் போக்கால் ஆசிரியை லதா மரணித்தது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இன்னும் ஏழு ஆண்டு காலம் அவருக்கு பணிக்காலம் இருக்கிறது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இரண்டு பிள்ளைகளும் தாய் இல்லாத பிள்ளைகளாய் ஆகிவிட்டார்களே..! இந்த கொடுமைக்கு யார் காரணம்..?

அதேபோல, திருச்சி அரசு சையது முதுர்சா மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த கணினி ஆசிரியர் வி.வினோத்(45), விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவசரமாக சென்னைக்கு பயிற்சிக்கு வரவேண்டும் என்று அழைத்துள்ளனர். இதன் காரணமாக மன உளைச்சலில் சென்ற அவர் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டார். அவரது குடும்பம் நிர்க்கதியாக நிற்கிறது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய இந்த ‘எண்ணும், எழுத்தும்’ பயிற்சியில், பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், மருத்துவ விடுப்பில் இருந்தாலும் உடனடியாக விடுவித்துக்கொண்டு கட்டாயமாக தமிழ்நாடு முழுவதும் பயிற்சியில் சேர வைத்திருக்கிறார்கள். 6, 9,10 ஆகிய தேதிகளில் குடும்பத்தில் திருமண நிகழ்ச்சிகள், காதணி விழா, புதுமனை புகுவிழா போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழை காட்டினாலும், அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! உங்கள் பெயர் பட்டியலில் உள்ளது நீங்கள் பயிற்சியில் இருந்தே ஆக வேண்டும், என்று கட்டாயப் படுத்தி உள்ளார்கள். எந்த அலுவலரைக் கேட்டாலும் மேலிடத்தின் கடுமையான உத்தரவு என்று தெரிவித்து இருக்கிறார்கள். மேலிடம் என்பது யார்..?

Representative Image

‘ஆசிரியர்கள் பயிற்சிக்கு வர முடியாவிட்டால் வேலையை விட்டு செல்லுங்கள்’ என்று, மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் ஒருவர் கூட இல்லாமல் சும்மா இருக்கும் இவர்கள், கற்றல்-கற்பித்தல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை வேலையை விட்டு போகச் சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்..? இவர்களின் பணிசெய்யும் திறனை அரசு கண்காணிக்க வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இவ்வளவு கொடுமைகள் இருந்திருக்காதே என்ற உணர்வுதான் ஆசிரியர்கள் மத்தியிலும், அவர்களுடைய குடும்பத்தார் மத்தியிலும் நிலவுகிறது. 2017ல், முந்தைய ஆட்சியில் கூட விடுமுறை நாட்களில் பயிற்சி வேண்டாம் என ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பயிற்சியினை ஒத்திவைத்தார்கள். இவையெல்லாம் ஆசிரியர்கள் மறக்கவில்லை. கலைஞர் அரசு ஆசிரியர் சமுதாயத்திற்கும், அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தது என்பதை எங்களால் மறக்கத்தான் முடியுமா..?

ஐஏஎஸ் அதிகாரிகள் கல்வித்துறையினை ஆட்டிப் படைக்கிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமல்ல, தலைமையிட அதிகாரிகளும் கடுமையான மன உளைச்சலில்தான் உழல்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர் சமுதாயத்தின் மீது அன்றாடம் தாங்கிக் கொள்ள முடியாத பணிச்சுமையை சுமத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சித்திரவதை செய்கிறார்கள். இதனால் ஆசிரியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வரும் கோபத்தை விட, ஆட்சியின் மீதல்லவா? கோபமும், வெறுப்புணர்வும் மேலிட்டு வருகிறது.

Also Watch : முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன்? | பரபரக்கும் கல்வித்துறை | வா. அண்ணாமலை.

பாதிப்பு ஏற்பட்டதற்கு பிறகு ஆய்வு செய்வதை விட, கல்வித்துறையினை கண்காணிப்பதற்காக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தனி கவனம் கொண்டு, ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேணுமாய் முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். மேலும் கோவில்பட்டி, திருச்சியில் ஆசிரியர்களின் உயிர் பலிக்கு காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறோம்.

எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. எண்ணும் எழுத்து பயிற்சி ஒன்றும் இராணுவப் பயிற்சி அல்ல. பள்ளி திறந்த பின் இந்த பயிற்சியை நடத்தியிருக்கலாம். கல்வித்துறை பொறுப்பு வகிக்கின்ற இந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதலில் மனிதநேய பயிற்சியினை அளிப்பதற்கு ஏற்பாடு செய்திட ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் முதலமைச்சரை பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தலைமைச் செயலாளரும், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரும் உடனடியாக தலையிட்டு பயிற்சியினால் மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் பாதுகாத்திட வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry