
தனது அரசைக் கலைப்பதில் சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட்டதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக Jamaat-e-Islami மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் முஹம்மது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இதன் பிறகும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மற்றும் இந்துக்கள் உள்பட சிறுபான்மையினரை குறிவைத்து மாணவர்கள் அமைப்பினர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவாமி லீக் கட்சியினர் பலர் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகிய பின், நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினரைக் குறிவைத்து குறைந்தபட்சம் 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, நாட்டுக்காக உரையாற்ற விரும்பியதாகவும், ஆனல் வன்முறை காரணமாக எதிர்ப்பாளர்கள் அவரது வீட்டு வாசலை அடைந்ததால், நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சீக்கிரம் வெளியேறுமாறு அறிவுறுத்தியதாலும் தன்னால் உரை நிகழ்த்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி தனது நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “வன்முறையில் இறக்கும் உடல்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே நான் என் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. ஒருவேளை, நான் நாட்டில் தங்கியிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும்.
மேலும் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உங்கள் தலைவராக ஆனேன். நீங்கள் என் பலம். அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களே என் பலம். ஆனால், அவர்களே என்னை விரும்பவில்லை. அதனால்தான் நான் வெளியேறினேன். செயிண்ட் மார்ட்டின் மற்றும் வங்காள விரிகுடாவை” அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால் ஆட்சியில் நீடித்திருக்க முடியும்.
அவாமி லீக் கட்சி எப்போதும் மீண்டு வந்துள்ளது. நம்பிக்கையை இழக்கக்கூடாது; நான் விரைவில் திரும்பிவருவேன். நான் தோற்றுவிட்டேன், ஆனால் வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவாமி லீக் தலைவர்கள் குறிவைக்கப்படுவது வேதனையளிக்கிறது. வங்கதேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் பிரார்த்தனை செய்வேன்.போராட்டம் நடத்தும் மாணவர்களை, நான் ஒருபோதும் ரசாக்கர்கள் என்று அழைத்ததில்லை.
மாறாக, உங்களைத் தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, முழு வீடியோவைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது அரசாங்கத்தைக் கவிழ்க்க மிகப்பெரிய சதி தீட்டப்பட்டது. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. வாய்ப்பு கிடைத்திருந்தால், இதை எனது உரையில் கூறியிருப்பேன்” என ஷேக் ஹசீனா கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry