கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் லிட்டர் ரூ.92 ஆக உள்ளது.
நேற்றைய நிலவரப்படி(டிச. 7) மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90.30-க்கும், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 83.71-க்கும், கொல்கத்தாவில் ரூ. 84.90-க்கும், சென்னையில் ரூ.86.25-க்கும், பெங்களூருவில் ரூ. 86.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 வாரக் காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை சுமார் 14 முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
டீசல் விலை, டெல்லியில் லிட்டர் ரூ. 73.87-க்கும், மும்பையில், ரூ. 80.51-க்கும், கொல்கத்தாவில் ரூ.77.44-க்கும், சென்னையில் ரூ. 79.21-க்கும் விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக பணவீக்கமும் அதிகரிக்கிறது. விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பெட்ரோல் விலை 90 ரூபாய் என்பது, இந்திய அரசு மக்களிடம் இருந்து பெருமளவு சுரண்டுவதையே காட்டுகிறது. சுத்திகரிப்பதற்கு முன் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.30 ரூபாய். அனைத்து விதமான வரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கான கமிஷன் ஆகியவை எஞ்சிய 60 ரூபாய். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
Petrol price at Rs. 90 per litre is a monumental exploitation by GoI of the people of India. The price ex-refinery of petrol is Rs. 30/litre. All kinds of taxes and Petrol pump commission add up the remainder Rs.60. In my view petrol must sell at max. Rs. 40 per litre.
— Subramanian Swamy (@Swamy39) December 7, 2020
மோடி பதவியேற்ற 2014-ம் ஆண்டு, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்த சமயத்தில், பெட்ரோல் லிட்டர் ரூ.71.51 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 57.20 ஆகவும் இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி (டிசம்பர் 7), ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 49 டாலர் மட்டுமே. ஆனால், பெட்ரோல் 90 ரூபாயாகவும், டீசல் 80 ரூபாயாகவும் விற்கப்படுவது ஏன் என்பது 1.2 பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
உலகிலேயே எரிபொருட்கள் மீது அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 32.98% ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கான கலால் வரி 31.83% ஆகவும் உள்ளது. இதுபோக, மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டுவரி சராசரியாக 30% ஆக இருக்கிறது. விற்பனையாளர்கள் கமிஷனாக 2-4% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 69% வரி விதிக்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry