நீர்நிலைகளின் கரைகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு வெளியேற்றும் நிலையில், நீர் நிலைகளை தனியார் வசமாக்கும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்காக) சட்டம், 2023ஐ நடைமுறைக்குக் கொண்டு வருவதைத் தடுக்கவில்லை. இது நீர்நிலைகள், கால்வாய்கள் அல்லது நீரோடைகளைக் கொண்ட நிலப் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கிறது.
அக்டோபர் 18ல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட நிலத்தில், நீர்நிலைகள் அல்லது நீரோடைகள் இருந்தால், அதற்கு மாற்றாக வேறு இடத்தில் நிலத்தை ஒப்படைக்க திட்ட உரிமையாளரை அனுமதிக்கிறது. மேலும், எந்தவொரு திட்டத்தையும் ‘சிறப்புத் திட்டம்’ என்று அறிவித்தால், அதை நீர்நிலைகளில் கூட செயல்படுத்த முடியும்.
நீர்நிலைகளில் கட்டுமானங்களை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்புமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சில நாட்களிலேயே, நீர் நிலைகளை தனியார் வசமாக்கும் வகையிலான சிறப்புச் சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21, 2023 அன்று இந்த சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் அதை எதிர்த்தன. இந்தச் சட்டம் நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பொது நிலங்களில் மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உரிமைகளை பறிக்கும் என்று அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
பரந்தூர் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் போன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அப்போதே குற்றம்சாட்டியது. ஆனால், இந்தச் சட்டத்தை நியாயப்படுத்தும் வருவாய்த்துறை, உள்ளாட்சி – நகராட்சி சட்டங்கள் போன்ற பல்வேறு சட்டங்களால் நிலம், நீர் நிலைகள் நிர்வகிக்கப்படுகிறது, இது நிலங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன் மக்கள் பணத்தை விரயமாக்கும் என்கிறது.
ஆகஸ்ட் 2023இல், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கு) விதிகள், 2024-ஐ அறிவிக்கை செய்யவும், வருவாய்த்துறை தனி அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
Also Read : நீர்நிலைகளை சீரழிக்கும் நில ஒருங்கிணைப்பு மசோதா? கேள்வி கேட்காமல் ஒப்புதல் அளித்த ஆளுநர்!
புதிய சட்ட விதிகளின்படி, திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலத்தில், ஒட்டுமொத்த நீரின் இருப்பு குறையாமல் இருப்பதை திட்டத்தை செயல்படுத்துபவர் உறுதி செய்ய வேண்டும். மேலும் கால்வாயின் தாங்கும் திறன் அல்லது நீர் பாய்ச்சலுக்கான வேறு எந்த ஏற்பாடுகளும், திட்டத்திற்கான நிலத்தின் மேலோ அல்லது கீழோ, நீரோட்டம் எந்த வகையிலும் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த விதிகள் திட்ட செயல்பாட்டாளருக்கு ஒருங்கிணைப்பு முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கு அனுமதிக்கின்றன. அவை நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்தக் குழு முன்மொழிவின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் மற்றும் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தும். அதன் பின்னர் நில ஒருங்கிணைப்பு திட்டத்தை முன்மொழியும். பிறகு திட்டத்திற்கு நிபந்தனைகளுடனோ அல்லது நிபந்தனைகள் இல்லாமலோ அரசு ஒப்புதல் வழங்கும். திட்டங்களுக்கான விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அதிகாரம் இச்சட்டத்தில் எங்கும் கிடையாது. திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன், அது அரசிதழில் வெளியிடப்படும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறும்போது, “நீர்நிலைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதை இந்த சட்டம் எளிதாக்கும். காலப்போக்கில் இயற்கை நிகழ்வுகள் காரணமாக, எந்தவொரு தனியார் நிலத்தையும் நீர்நிலையாக அறிவிக்க வருவாய் வாரியத்தின் நிலையான உத்தரவு (26-ஏ) உள்ளது; அந்த உத்தரவின்படி, நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடாக வேறு இடத்தில் நிலம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், மே 2022 இல், பட்டா நிலங்களின் உரிமையாளர்கள் பட்டா நிலங்களுக்கு சென்றுவரும் பாதைகளாக, நீர்நிலைகள் அல்லது நீரோடைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மே 2022இல் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. திட்டத்திற்கான நிலங்களில் நீர்நிலைகளை வைத்திருக்கும் திட்ட உரிமையாளர்கள், அதை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கான உரிமையை புதிய சட்டம் வழங்கும்.
மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள 90 சதவிகித நீர்நிலைகள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது. நீர்நிலைகளின் உரிமையையும், நிர்வாகத்தையும் தனியார் நிறுவனங்கள் உட்பட திட்ட உரிமையாளர்கள் வசம் மாற்றுவதே சட்டத்தின் முக்கிய நோக்கம். திட்டத்திற்கான நிலத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்க திட்ட உரிமையாளர்களை அனுமதிப்பதன் மூலம், இந்த சட்டம் மறைமுகமாக நீர்நிலைகளை தனியார்மயமாக்கும்.
திட்டத்திற்கான நிலத்தில் உள்ள ஒட்டுமொத்த சேமிப்பு திறனை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் வகையில், மற்றொரு நீர்நிலையின் பிடிப்பு திறனை அல்லது கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீர்நிலைகளை அழிக்க திட்ட உரிமையாளர்களை இந்த விதிகள் அனுமதிக்கும்” என்று வெற்றிச்செல்வன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு மேலாண்மைச் சட்டம் 2000 மூலம், உறுதி செய்யப்பட்ட உரிமையான நீர்நிலைகளைப் பயன்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால், நீர்நிலைகள் மீதான விவசாயிகளின் உரிமைகளையும் இந்த சட்டம் பறிக்கும் என்று விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
Source – DT Next
Image Source – Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry